கருணாநிதியை நலம் விசாரித்தார் ரஜினி

--

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து  சற்று நேரத்துக்கு முன் காவேரி மருத்துவமனைக்குச் சென்று நேரில் விசாரித்தார் நடிகர் ரஜினிகாந்த்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி, வயது முதிர்வு காரணமாகக் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் திடீர் ரத்த அழுத்தக் குறைவு காரணமாகச் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 28-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, காவேரி மருத்துவமனை சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலகினரும் விசாரித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த்,  கருணாநிதியின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஸ்டாலினிடம்  கேட்டறிந்தார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும், படத்தின் படப்பிடிப்பு டேராடூனில் நடைபெற்று வருகிறது. அவர் சென்னை திரும்பியதும் கருணாநிதியை நலம் விசாரிப்பார் எனத் தகவல் வெளியானது. இன்று சென்னை திரும்பிய அவர், காவேரி மருத்துவமனைக்கு இரவு 8.45 மணிக்குச் சென்றார். கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோரிடம் கேட்டறிந்தேன். இந்திய அரசியலின் மூத்த தலைவர் கருணாநிதி. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன்’’  என்று தெரிவித்தார்.