திமுக கூட்டணி கட்சிகளின் பேர வலிமையை காலிசெய்த ரஜினிகாந்த்!

ரஜினிகாந்தை முன்வைத்து ஒரு புதிய அணி கட்டமைக்கப்பட்டால், ‍அதை சுட்டிக்காட்டி, திமுக கூட்டணி கட்சிகள் தங்களின் பேரத்தை வலுப்படுத்தும் என்ற ஒரு கருத்து நிலவி வந்தது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில சிறிய கட்சிகள், தாங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என்றும்கூட அறிவித்தனர். இதற்கிடையே ரஜினி புதுக்கட்சி அறிவிப்பை வெளியிட்டவுடன், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீட்டில் கறார் தன்மையைக் கடைப்பிடிக்கப் போவதில்லை என்று திமுக தலைமை முடிவு செய்திருப்பதாகவும்கூட செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், ரஜினியை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் இன்று எதிர்பார்த்த மாதிரியே ‘பணால்’ ஆகியுள்ளது.

சிலபல மாதங்கள் முன்புவரை, ரஜினியை மனதில் வைத்து, வேறுமாதிரி பேசிவந்த தமிழக காங்கிரசின் சில தலைவர்கள்கூட, ரஜினியை சற்று முன்னதாகவே புரிந்துகொண்டு கப்சிப் ஆகிவிட்டனர். தற்போது, வழக்கம்போலவே திமுக – அதிமுக என்ற கட்சிகளை முன்வைத்துதான் தமிழ்நாட்டின் அரசியல் களம் சுழல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, தற்போதைய அரசியல் சூழலில், 10 ஆண்டுகால அவலமான ஆட்சியின் மீதான மாபெரும் அதிருப்தி மற்றும் பெரியளவிலான உள்கட்சிப் பூசல் ஆகிவற்றுடன் அவதிப்படும் அதிமுகவை ஒப்பிடுகையில், தேர்தல் களத்தில் திமுக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

எனவே, கொடுப்பதை வாங்கிக் கொண்டு போட்டியிட வேண்டிய சூழலுக்கு, திமுக கூட்டணி கட்சியினர் தள்ளப்பட்டுள்ளனர் என்பதே உண்மை!