புதிய கல்விக் கொள்கை: சூர்யாவுக்கு தோள் கொடுத்த ரஜினி

சென்னை:

த்தியஅரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக்கொள்கை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், நடிகர் ரஜினி சூர்யாவின் கருத்தை வரவேற்றுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாநில அரசியல் கல்வித்திட்டத்தை ஒழிக்கும் வகையில் மத்தியஅரசு கொண்டு வரும் தேசியக் கல்விக்கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், நடிகர் சூர்யாவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். புதிய கல்விக்கொள்கை கிராமப்புற மாணவர்களின் கல்வியை அடியோடு ஒழித்துவிடும் என குமுறியிருந்தார்.

சூர்யாவின் கருத்துக்கு மக்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், கமல், சீமான் உள்பட சில அரசியல் கட்சிகளும் வரவேற்பு தெரிவித்து உள்ளன. ஆனால், பாரதியஜனதா கட்சி சூர்யாவின் கருத்தை கடுமையாக விமர்சித்து வருகிறது.‘

இந்த நிலையில் பாஜக ஆதரவாளரான நடிகர் ரஜினிகாந்த், சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

நேற்று நடைபெற்ற கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள, ‘காப்பான்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினி கலந்துகொண்டது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

‘விழாவில் பேசிய ரஜினி, சூர்யா விடா முயற்சியில் முன்னேறி இருக்கிறார். நேருக்கு நேர் படத்தில் அவர் நடிப்பை பார்த்து விட்டு இவர் நடிகராக தேறுவாரா என்றுதான் நினைத்தேன். அதன் பிறகு நந்தா, பிதாமகன் படங்களில் மிரட்டினார். இன்றைக்கு சிறந்த நடிகராக வளர்ந்து நிற்கிறார். தன்னை தானே செதுக்கி உயர்ந்த இடத்திற்கு வந்திருக்கிறார். சூர்யாவையும், கார்த்தியையும் ஒழுக்கமான பிள்ளைகளாக சிவகுமார் வளர்த்திருக்கிறார்.

சமீபத்தில் புதிய கல்வி கொள்கை பற்றி சூர்யா கூறிய கருத்துகள் சர்ச்சை ஆனது. இங்கே பேசிய வர்கள் இதே கருத்தை ரஜினிகாந்த் பேசியிருந்தால் மோடி கேட்டிருப்பார் என்றார்கள். சூர்யா பேசினாலும் மோடி கேட்பார். சூர்யாவின் கருத்தை நான் ஆதரிக்கிறேன்.

‘அகரம் பவுண்டேஷன் மூலம் நிறைய உதவிகள் செய்து வருகிறார். மாணவர்களின் கஷ்டங்களை நேரில் பார்த்த அனுபவம் அவருக்கு இருக்கிறது. அவர் பேசும் கருத்துக்கள் வரவேற்கதக்கவை. எதிர்காலத்தில் அவரின் சேவை நாட்டுக்கு தேவையாக இருக்கும்.

இவ்வாறு ரஜினி பேசினார்.

ரஜினியின் பேச்சு சூர்யாவின் கருத்தை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழக பாஜகவினர் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.

கார்ட்டூன் கேலரி