முரசொலி பவள விழாவுக்கு ரஜினி வருவார்!:  தி.மு.க. தகவல்

 

திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியின் பவள விழா நடக்க இருக்கிறது. அதில் நடிகர்கள் கமல் ரஜினி இருவரும் கலந்துகொள்வார்கள் என்று தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அழைப்பிதழில் ரஜினி பெயர் இல்லை. கமல் பெயர் மட்டுமே இருந்தது.

இதனால் விழாவில் ரஜினி கலந்துகொள்வாரா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில்,  திமுக நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுவதாவது:

“விழா மேடையில் பேச விரும்பவில்லை என்றும்  வெறும் பார்வையாளராக மட்டும் பங்கேற்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.  இதுகுறித்து அவர் மு.க. ஸ்டாலினிடமும் தெரிவித்துள்ளார்.

ஆகவேதான் அவருடைய பெயர் விழா அழைப்பிதழில் இடம் பெறவில்லை. ஆனால் அவரும் பவளவிழாவில் நிச்சயம்  கலந்துகொள்வார்” என்று தெரிவித்தனர்.

மேலும்,”இந்த விழாவிற்காக, பவள விழா சிறப்பு மலர்  512 பக்கங்களில் தயாராகி வருகிறது.   இதில் தேசிய அளவில் 13 தலைவர்களின்  வாழ்த்து செய்திகள் இடம்பெற்றுள்ளன.

முரசொலி இதழ்,  தி.மு.க. தலைவர் கருணாநிதியால் 1942-ம் ஆண்டு வார இதழாக  ஆரம்பிக்கப்பட்டது.  பிறகு நாளிதழாக வெளியாகி வருகிறது.

அந்த இதழில் இடம்பெற்ற, பல்வேறு முக்கிய தகவல்கள் பவளவிழா மலிரில் இடம் பெறுகிறது.  மலரின் விலை ரூ.3 ஆயிரம்” என்றும் தெரிவித்தனர்.