ரஜினி 68

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்

ன்றைக்கு ஒரு படத்தின் பட்ஜெட்டே 540 கோடி ரூபாய்.. தமிழ்ச்சினிமாவில் ஆரம்ப காலத்தில் தொடர்ச்சியாய் முப்பதாண்டுகளுக்கு வெளிவந்த ஒட்டு மொத்த படங்களின் பட்ஜெட்டை ஒன்றாக சேர்ந்தால்கூட மேலே சொன்ன 2.0 பட்ஜெட்டுக்கு வராது..

1960 களின் இறுதியில் பெங்களுரில் பள்ளிப்படிப்பு முடிந்து மேற்கொண்டு படிக்க விரும்பாமல், சுயமாய் சம்பாதிக்கவேண்டும் என்ற வெறியில் மூட்டைக்கு 10 பைசா கூலி என அரிசி மூட்டை தூக்கியும், ஆபிஸ் பாயாகவும் வேலைபார்த்த ஒரு சாதாரண இளைஞன்தான் இன்றைக்கு 540 கோடி பட்ஜெட் பின்னணிக்கு இப்போது கதாநாயகன் என்றால் நம்புவது சிரமம்தான்..

பாகதவர், சின்னப்பா, எம்ஜிஆர் சிவாஜி காலங்களில் தமிழ் சினிமா என்பது தமிழ்நாட்டை தாண்டி மாநில எல்லையோரம் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் மட்டுமே திரைமொழி பேசும். வர்த்தக எல்லை அவ்வளதான். அவர்களும் மற்ற மொழி படங்களில் நடிப்பதில் ஆர்வமே காட்டவில்லை.

இந்திய சினிமாக்களில் பிரமாண்டத்தின் பிதாமகன் படம் என வர்ணிக்கப்படும் ஜெமினி எஸ்எஸ்வாசனின் சந்திரலேகா (1948) போன்ற படங்கள் மட்டுமே விதிவிலக்காக திகழ்ந்தன.

ஆனால் கமலும் ரஜினியும் தமிழ் சினிமாவுக்கு வந்தபிறகு மாநில எல்லைகள் உடைக்கப்பட்டன. தெலுங்கில் மரோசரித்தா, கன்னடத்தில் கோகிலா இந்தியில் ஏக்துஜே கேலியே என கமல் பாய்ந்து பாய்ந்து அடிக்கஆரம்பித்தார். ரஜினியும் பின்னாளில் இந்தியில் கால் பதித்து தேசிய அளவில் பிரபலம் ஆனார். இன்று உலக லெவலில் இருவருமே பிரகாசிக்கின்றன. தமிழ் சினிமாவும் ஜொலிக்கிறது.

ஆனால் பட்ஜெட், வசூல் என வரும்போது ரஜினியின் உயரம்  ஹாலிவுட் படங்களின் பிரம்மாண்டத்தை தொட்டுக்கொண்டிருக்கின்றன. இன்றைக்கு சூப்பர் ஸ்டார் என கோடான கோடி ரசிகர்களால் உயிர்போல நேசிக்கப்படும் ரஜினியின் ஆரம்ப வாழ்க்கை ராஜ வாழ்க்கையாக இருக்கவில்லை. பெங்களுருவில் சாமான்ய குடும்பம்தான்..

கலாசிபாளையம் அருகே வாணிவிலாஸ் மருத்துவமனையில் ரானோஜிராவ்-ரமாபாய் தம்பதிக்கு பிறந்து சிவாஜி ராவ் கெய்க்வாட் என்று நாமகரணம் சூட்டப்பட்டவருக்கு, முதன் முதலில் கிடைத்த உருப்படியான வேலை, அரசு பேருந்தில் கண்டக்டர்..

உறவினரான போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கோப ராவ் கொடுத்த அறிவுரையை ஏற்று நுழைவுத்தேர்வை எழுதி, கண்டக்டர் லைசன்சை போராடி அது கிடைத்த பின்னர்   பெற்ற வேலை இது..

குடும்பத்தினர் புரிந்துகொள்ள முடியாத ஒரு விஷயத்தை பஸ்ஸில் சிவாஜிராவுடன் வேலைபார்த்த டிரைவர் பகதூர் என்பவர் புரிந்துகொண்டார்.. அதுவேறொன்றுமில்லை… கண்டக்டரின் ஸ்டைல்.. டிக்கெட்டுகளை வேகமாக கொடுத்த விதம்…. தலைமுடியை கோதிகோதி பின்னுக்கு தள்ளிவிடுகிற அலட்சியமான மேனரிஸம்.. இப்படி பல விஷயங்கள் பகதூரை வித்தியாசமாய் பார்க்க வைத்தபடியே இருந்தன.

காலை ஆறுமணி முதல் மதியம் இரண்டு மணிவரை தினமும் மெஜஸ்ட்டி-ஸ்ரீநகரா இடையே பஸ்ஸை பறக்கவைத்த டிரைவர் பகதூருக்கு, கொஞ்ச நாளிலேயே ஆத்ம நண்பராக மாறிவிட்டார் கண்டக்டர் சிவாஜிராவ் கெய்க்வாட்…

இந்த உரிமையில் ஒரு நாள் கேட்டபோதுதான், சிவாஜிராவ், தனக்கிருந்த ஆசையை பகதூரிடம் சொன்னார்..கொஞ்சம் குண்டான உடல்வாகு, கருத்த நிறம், தெளிவான பேச்சு கிடையாது..இப்படி ஏராளமான குறைகளோடு இருந்த சிவாஜிராவின் ஆசை கொஞ்சம் அதிகப்படிதான் என தோன்றியது பகதூருக்கு.. இருந்தபோதிலும் கண்டக்டர் வேலையின்போது சிவாஜிராவ் செய்கிற வித்தியாசமான சேட்டைகள், ஸ்டைல்கள் ஆசைப்படுவதற்கு அர்த்தம் இருக்கிறது என்று தீர்மானிக்க வைத்தது பகதூரை..

ஆர்வத்தின் காரணமாக அவ்வப்போது நாடகங்களில் சிவாஜிராவ் நடிப்பதுண்டு..அப்படியொருமுறை துரியோதனன் வேடத்தில் பாண்டவர்களை பார்த்து நண்பன் சிவாஜிராஜ் சிரித்த எகத்தாள சிரிப்பை பகதூர் நினைவு படுத்தி பார்த்தபோது சம்திங் அமேசிங் என்று புரிந்தது..

மனம்விட்டு பேசியபோது சிவாஜிராவிடம் பெரிய அளவில் சினிமா கனவு இருப்பது வெளிய வந்து விழுந்தது..( இதே நக்கலான சிரிப்பைத்தான் எந்திரனில் சிட்டி கேரக்டரில் மீண்டும் ரிபீட் செய்ததாக பகதூர் சொல்கிறார்)

இது நடக்கும் 1970களின் கால கட்டம் எப்படி இருக்கும் தெரியுமா? தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் தயாராகும் படங்களுக்கு அப்போது சென்னைதான் தலைநகரம்..

தெலுங்கு என்டிஆர், நாகேஸ்வரராவ், கன்னடத்து ராஜ்குமார், மலையாள பிரேம் நசீர் போன்ற ஸ்டார்களுக்கு பெரும்பாலும் சென்னை ஸ்டுடியோக்களில்தான் வாசம் என்பதால் சென்னையில் தங்க எல்லோருக்குமே சொந்த வீடு உண்டு. நடிகைகளுக்கும் இதே கதைதான்.

சென்னையில் கோடம்பாக்கம், வடபழனி, வளசரவாக்கம் போன்றவற்றின் முக்கிய பகுதிகளில் உள்ள சொத்துக்களில் நிறைய மற்ற மாநில சினிமாகாரர்களுடையதாகத்தான் இருக்கும். இல்லை அவர்களிடமிருந்து கைமாறியிருக்கும்.

அந்த அளவுக்கு தென்னிந்தியாவின் முன்னணி ஸ்டார்கள் உட்பட அனைத்து சினிமா உலக புள்ளிகள் வசிப்பதும் சென்னையில்தான் என்பதால் பெங்களுருவிலிருந்து ஜாகையை மாற்றினால் மட்டுமே சினிமா கனவு சாத்தியம் என்பது பகதூருக்கும் புரிந்தது.. சிவாஜிராவுக்கோ, சினிமாவில் ஒரு கை பார்க்காமல் போகவேகூடாது என கொலைவெறி.. மன்னிக்கவும் கலைவெறி…

இதன்பிறகு சென்னை திரைப்படக்கல்லூரியில் சேர்க்கை.  படிக்கும்போது ஏதோ ஒரு தருணத்தில் கன்னட நாடகம் நடிக்க, அதை தற்செயலாக பார்த்தார் இயக்குர் சிகரம் கே.பாலசந்தர். அவ்வளவுதான்.. சிகரம் என்கிற இரும்பு உற்றுப்பார்க்க அதில் சிவாஜிராவ் என்ற காந்தம்போய் ஒட்டிக்கொண்டது..

நாடகத்தில் சிவாஜிராவ் என்ற கருப்புமனிதனின் நடிப்பு மற்றும் ஸ்டைல் முற்றிலும் வித்தியாசமாய் இருந்ததை கவனித்து, பாலச்சந்தர் சொன்ன ஒரே வாக்கிய அறிவுரை,’’தமிழ் கற்றுக்கொள்’’.

அதாவது தமிழை நன்றாக பேசக்கற்று கொண்டுவிட்டால் உனக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று அர்த்தம்..சிவாஜிராவ் மனதில் அன்று இப்படித்தான் பட்டது..

அது முதலே ஆத்ம நண்பன் பகதூரிடத்திலும் சரி..தமிழ் தெரிந்த மற்றவர்களிடமும் சரி..சிவாஜிராஜ் பேச்சு, முட்டிமுட்டி மோதி உடைந்தாலும் தமிழில்தான் போக ஆரம்பித்தது..எதைநோக்கி சிவாஜி ராவ் ஓடினாரோ, அது அருகிலேயே வந்துவிட்டது.

ஆம், தமிழை கற்றுக்கொள் என்று சொன்ன கே.பாலச்சந்தரே, அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் சின்ன ரோலைக்கொடுத்தார்..அத்தோடு சிவாஜிராவ் என்ற அடையாளத்தை தள்ளிவைத்துவிட்டு ரஜினிகாந்த் என்றும் சினிமாவுக்கா புது நாமகரணத்தை சூட்டினார்..

1973-ல் பெரும் வெற்றிபெற்ற காவியம், நடிகர் திலகம் இரட்டை வேடத்தில் நடித்த கௌரவம் படம். அதில் கோர்ட்டையே கலக்கி சிங்கமாய் கர்ஜிக்கும் தந்தை பாத்திரத்தின் பெயர் பாரீஸ்டர் ரஜினிகாந்த்..

தமிழகம் முழுவதும்  பாப்புலாராகிவிட்ட அந்த  ரஜினிகாந்த் என்ற பெயர், ஒரு அறிமுக நடிகருக்கு நிஜ வாழ்க்கையில் உண்மையான முகவரியாகவே மாற்றப்பட்டுவிட்டது.

பொதுவாக முதல் படம், அதிலும் தாம் முதன் முதலாய் திரையில் காட்டப்படும் காட்சி அசத்தலாக இருக்கவேண்டும் என்றே எவருமே நினைப்பார்கள்.. பிரமாண்டமாக இல்லாவிட்டாலும் மோசமாக  அமைந்துவிடாக்கூடாது என்றே விரும்புவார்கள்..

ஆனால் ரஜினிகாந்த் விஷயத்திலோ, சினிமா உலகில் யாருமே சந்திக்காத ஒரு கொடுமையிலும் கொடுமை நடந்தது.. 1975 ஆம் ஆண்டு, அபூர்வ ராகங்கள் படத்தில், அறிமுகமாகமாகும் முதல் பிரேமிலேயே, அவர் மேல், ‘சுருதி பேதம்’ என்று போடப்பட்டது. அதாவது, ஏடாகூடம், சனியன் பிடிச்சது, வௌங்காதது என பல அர்த்தங்களை கொள்ளலாம் இதற்கு.

கமலஹாசனோடு ரஜினிகாந்த் பேசுவது, கடைசியில் மனைவி மகள் முன் உயிரைவிடுவது என சொற்பக்காட்சிகள் என்றாலும், படத்தின் அச்சாணியான பைரவி என்ற இசைக்கலைஞரின் கணவன் என்பதால், நல்ல வெயிட்டேஜ் கிடைத்தது இந்த ரோலுக்கு.

இந்தியாவையே ஷோலே என்ற இந்திப்பட புயல் துவம்சம் செய்துகொண்டிருந்த நேரம். ஷோலே படம் வெளியான  சில தினங்கள் ஆன நிலையில்தான் அபூர்வராகங்கள் வந்து வெற்றிகரமாகவே ஓடியது.

பெங்களுர் கபாலி தியேட்டரில் ரிலீசான படத்தை நண்பர்களோடு பார்க்கப் போனபோது சிவாஜிராவை ரசிகர்கள் யாருமே அடையாளம் கண்டுகொள்ளவில்லை..

முதல் படத்திற்கு பிறகு ரஜினிக்கு உண்மையிலேயே சரியாக தீனிபோட்டவர் இயக்குநர் புட்டண்ணாதான். வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களை இயக்கிய ஜாம்பவான் பி.ஆர்.பந்துலுவின் சிஷ்யர்தான் புட்டண்ணா. கே.பாலச்சந்தரின் மானசீக குருமார்களில் முக்கியமானவர் இவர். டைரக்டர் பாரதிராஜாகூட புட்டண்ணாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர்தான்.

ரஜினி திரைப்பட கல்லூரியில் சேரும்போது அவரை இன்டர்வியூ செய்தவர்களில் முக்கியமானவர் இந்த புட்டண்ணா..அப்போதே ரஜினியின் திறமை அவருக்கு உள்ளுக்குள் உறுத்தியது என்னமோ..

கன்னடத்தில் சரோஜாதேவி, கல்யாணகுமார், ஆர்த்தி என பல பிரபலங்களை வைத்து கதா சங்கமா என்றொரு கன்னட படத்தை எடுத்தபோது ரஜினியை விடவில்லை. ஒரே படத்தில் மூன்று பாகங்களாக தனித் தனி கதைகள் கொண்ட படம்.

கடைசி பாகமான முனித்தாய் கதையில் கொண்டாஜி என்ற ஒரு வில்லன் பாத்திரம்.. கணவன் இல்லாத நேரத்தில் அவனைப்போலவே நடித்து குருட்டு மனைவியை திட்டம்போட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிடும் கொடூரத்தை செய்யும் பாத்திரம் ரஜினிகாந்துக்கு..

குளியலறையில் குருட்டுப்பெண், ஒவ்வொரு ஆடைகளையும் கழட்ட கழட்ட.. அருகே சுவற்றோரம் அமர்ந்து அவளின் பிறந்தமேனியை வெறிக்கப்பார்ப்பார் ரஜினி. காமிரா டைட் குளோஷப்பில் ரஜினியின் முகத்தை மட்டுமே படம்பிடிக்கும். கிட்டத்தட்ட 40 விநாடிகள் தொடர்ச்சியாக கண்கள், உதடு, கன்னம் என ஒவ்வொரு அங்கத்திலும் விதவிதமாய் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார் ரஜினி.

சூதாட்டம், குடிபோதை, பொறுக்கித்தனம் என ஊர் மேயும் வம்பனாக, எதைப்பற்றியும் யோசிக்காத ஒரு மட்டமான ஜென்மம் போன்ற ஒரு வெயிட்டான ரோலை, தனது இரண்டாவது படத்திலேயே  வெகு சுலபமாக ஸ்கோர் செய்திருப்பார்.

குருட்டுபெண்ணாக நடித்த ஆர்த்திக்கு சிறந்த நடிகைக்கான கர்நாடக அரசின் விருது கிடைத்தது என்பது இன்னொரு சமாச்சாரம். இந்த கதா சங்கமத்தன் முனித்தாய் பாகம்தான் பின்னாளில் ரஜினி, ரேவதி நடித்து மகேந்திரன் இயக்கத்தில் கை கொடுக்கும் கை என தமிழில் வெளியானது,

(தொடர்ச்சி.. இன்னும் சற்று நேரத்தில்..)

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Rajinikanth Birthday, Superstar 68, Superstar Rajini, Thalaiva
-=-