ரஜினி 68 ( தொடர்ச்சி)

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்

ஜினியின் நடிப்பு திறமையை அழகாக இப்படி புட்டண்ணா காட்டியதும் அவரை பின்தொடரும் கே.பாலசந்தரும் பாரதிராஜாவும் விடுவார்களா?

தமிழில் பெரும் வெற்றிபெற்ற அவள் ஒரு தொடர்கதையை தெலுங்கில் எடுத்தபோது அதில் ஜெய்கணேஷ் பாத்திரத்தை ரஜினிக்கு கொடுத்தார் கே.பாலச்சந்தர்.

ஜெயசுதாவின் அண்ணனாக வரும் ரஜினி, தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு பாடலுக்கு ரஜினி நடித்தவிதம் அவரை தெலுங்கு உலகிலும் பேசவைத்துவிட்டது. முதல் மூன்று படங்களுமே வெவ்வெறு மொழிகளில் எவ்வளவு ஆச்சர்யமான விஷயம்.

அபூர்வராகங்களில் கமலையும் ரஜினியையும் முதன் முதலில் ஒன்றாக பயன்படுத்திய பாலசந்தர், இம்முறை இருவரையும் மாற்றிப்போட்டு ஆடினார். கமல் கௌரவ வேடத்தில் நடிக்க, ரஜினிக்கு முதன் முறையாக வில்லன் கம் ஹீரோவா புரமோஷன்.. சிறுமியாக நடித்துக்கொண்டிருந்த ஸ்ரீதேவிக்கும் ஹீரோயினாக முதல்படம்., அதுதான், மூன்று முடிச்சு..

எந்த பாலசந்தர், ரஜினி அறிமுகத்தின்போது சுருதிபேதம் என்று போட்டாரோ அதே பாலசந்தர், தமிழில் இரண்டாவது படமான மூன்று முடிச்சு படத்தில், படத்தின் டைட்டிலேயே ரஜினி ஸ்டைலாக சிகரெட்டை வாயில் போடும் பிரேம் மீதுதான் போடவேண்டிவந்தது..

வில்லன் கம் ஹீரோவாக மூன்று முடிச்சு படத்தில் ரஜினி அசத்த, அதன் பிறகு அவர் திரையுலக வாழ்க்கையில் ஜெட் வேகம்தான்..

எஸ்.பி.முத்துராமன் புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் ரஜினி நடிப்பின் சகலவிதமான பரிமாணங்களை யும் காட்டி ரசிகர்களை உருக வைத்துவிட்டார்.

அடுத்து புட்டண்ணாவின் சீடரான பாரதிராஜா, கதா சங்கம ரேப்பிஸ்ட் கொண்டாஜி பாத்திரத்தை 16 வயதினிலே படத்தில் ரஜினிக்கு பரட்டை பாத்திரமாக செதுக்கிவிட்டார். அத்தோடு, ஒவ்வொன்றையும் ஏடாகூடாமாக செய்துவிட்டு உடனே ‘இது எப்டி இருக்கு’ என எகத்தாளமாக கேட்க வைத்தார். ரஜினியின் வசனங்களில் முதன் முதலில் பன்ச் டயலாக்காக மாறியது இந்த இது எப்படி இருக்கு? என்ற டயலாக்தான்.

நடிக்க வந்த இரண்டாமாண்டு முதலே ரஜினிக்கு வருடத்திற்கு பல படங்கள் கிடைத்தன. சர்வ சாதாரணமாய்  15 படங்களையாவது தாண்டும்.

அப்படிப்பட்ட படங்களில் மிகவும் முக்கியமானது, புவனா ஒரு கேள்விக்குறிக்கு பிறகு எஸ்பி முத்துராமன் ரஜினியை வைத்து இரண்டாவது முறையாக இயக்கிய ஆடு புலி ஆட்டம்.

எம்.ஜிஅர்,- சிவாஜி சகாப்த காலகட்டத்தில், புது விதமாய் ஸ்டைல், இங்லீஷ் டயலாக் டெலிவரி என கமலையும் ரஜினியையும் அடுத்த தளத்திற்கு கொண்ட சென்ற படம் அது. ரஜினி என்ன கருப்பு மனிதனுக்குள் இருந்து ‘’எதிலும் படு ஸ்பீடு’’ என்ற வித்தியாசமான அம்சத்தை வெளிக்கொண்டுவந்தது ஆடுபுலி ஆட்டம் ஈவு இரக்கமே இல்லாத கொள்ளையனாக ரஜினி என்ற பெயரிலே நடித்தார். எதிராளியை திக்குமுக்காட வைக்கும் ஒவ்வொரு சீனிலும் கடைசியாக தி இஸ் ரஜினி ஸ்டைல், இதான் ரஜினி ஸ்டைல் என்று தமிழிலும் இங்லீஷிலும் மாறி மாறி பேசுவார். அதேபோல, மேரா தோஸ்த் என்றும் ஸ்டைலா மாடுலேஷனில் பல காட்சிகளில் பேசுவார். இந்த வசனங்களெல்லாம் அன்றைய காலகட்டத்தில் இளைய தலைமுறையிடம் பாப்புலர் பன்ச் டயலாக்காக ஆகிப்போய்விட்டன. .

கருப்பு வெள்ளையில் வந்த ஆடு புலி ஆட்டம் போலவே ரஜினியின் சினிமா வரலாற்றில் அவர் ஸ்டைலின் புயல் வேகத்திற்கு வித்திட்ட படம் மாங்குடி மைனர்.

அவ்வளவு வேகமாக படத்தில் இங்லீஷ் டயலாக்குகள் ரஜினி வாயிலிருந்து பறக்கும். வில்லன் ரோலிலேயே ஒரு படு நக்கலான அலட்சியத்தையும் காட்டியிருப்பார் ரஜினி. இந்த ஒரு அம்சத்தை கெட்டியாக பிடித்துகொண்டு தனக்கென ஒரு ரூட்டை போட்டு வெற்றிகரமாக முன்னேறியவர்தான் சத்யராஜ்..

கமலுடன் சேர்ந்தும் சேராமலும் பல படங்கள் செய்து வந்த ரஜினி தனியாகவே மின்னும் அளவுக்கு தயாராக்கிவிட்டது 1978 ஆண்டு. பைரவியில் 100 பர்சென்ட் கதாநாயகனாக உயர்ந்த ரஜினி அது முதலே ஜெட் வேகம்தான். ஒரு பக்கம் கதாநாயகனாக, ஒரு பக்கம்.. கெட்ட பய சார் இந்த காளி என்று பேசும் காளி என்ற பாத்திரத்தை வைத்து முள்ளும் மலரும் படத்தின் மூலம் ரஜினியை வேறொரு கோணத்தில் காட்டி இயக்குநர் மகேந்திரன் அசத்தினார் என்றால், எஸ்பி முத்துராமன், ஆர்சி சக்தி போன்றவர்கள், பிரியா, தர்மயுத்தம், அன்னை ஓர் ஆலயம் போன்ற படங்களால் ரஜினி படம் என்றாலே நிச்சய வெற்றி என பாக்ஸ் ஆபிஸ் மசாலாக்கள் மேட்டரில் அடித்தளம் போட்டார்கள்.

இன்னொரு பக்கம் ஏற்கனவே ஒப்புகொண்டபடி கமல் விஜயகுமார் மற்றும் சிவாஜி போன்ற ஹீரோக்களுடன் இரண்டாவது ஹீரோ அல்லது வில்லன் வேடங்களில்..

இளமை ஊஞ்சலாடுகிறது. அவள் அப்படித்தான், நினைத்தாலே இனிக்கும், குப்பத்து ராஜா, நான் வாழவைப்பேன், ஜஸ்டிஸ்கோபிநாத் போன்றவையெல்லாம் அந்த லிஸ்ட்டுதான்.

1980ல் வந்த பில்லா படம் முதன்முறையாக இப்போது பிளாக் பஸ்டர் தெறி வசூல் என்றெல்லாம் பேசுகிறார்களே அந்த வகையிலான மெகா கலெக்சனை அள்ளியது. சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கச்சிதமாக பொருந்தியது.

ஆக்சன், ஸ்டைல் இவற்றில் ரஜினியை அடிக்க ஆளே இல்லை என ராஜபாட்டையை போட்டுத்தந்தது பில்லா படம்.

முரட்டுக்காளை, போக்கிரி ராஜா, மூன்று முகம் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிசில் மேலும் மேலும் ரஜினியை எங்கே கொண்டுபோயின.

மாபெரும் ஆக்சன் ஹீரோவாக திகழ்ந்த ரஜினி சினிமா பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை தந்தது எதுவென்றால் அது தம்பிக்கு எந்த ஊரு படம்தான்.

அதற்கு முன்பெல்லாம் தில்லுமுள்ளு படத்தை தவிர ரஜினி படங்களில் தனியாக காமடி டிராக் வைத்து காமெடியன்கள்  படத்தில் ஊடுறுவியிருப்பார்கள்.

ஆனால் ஆக்சன் ஹீரோவான ரஜினியே, காமெடியையும் சேர்த்து கனக்கச்சிதமாக செய்தார் தம்பிக்கு எந்த ஊரு. பெரியவர்கள், இளைய தலைமுறை, குழந்தைகள் என அனைத்து தரப்பினரையும் திரையரங்குகளுக்கு ரிபீட் ஆடியன்சாக கொண்டு வந்தது அந்த படம்தான்.

அதன்பின்னர் ஆக்சன் பிளஸ் காமெடி என்பதே ரஜினி படங்களின் தாரக மந்திரமானது. படத்தில் காமெடியன்கள் இருந்தாலும் தான் மட்டுமே சார்ந்த சீன்களிலும் காமெடியில் கலக்க ஆரம்பித்தார் ரஜினி.

குழந்தைகளை கவர்ந்ததுதான் ரஜினிக்கு பாப்புலாரிட்டியிலும் சரி, வசூலிலும் சரி பெரிய ஏற்றத்தை தந்தது. குழந்தைகள் தனியாக தியேட்டருக்கு போகமுடியுமா? பெற்றோர்தானே அழைத்துச்செல்லவேண்டும்..அப்போது பெற்றோரும் ரஜினிக்கு ரசிகராகத்தான் ஆகிப்போவார்கள். தமிழ்நாட்டில் அப்படித்தான் ஆகி எல்லோருக்கும் பிடித்த சூப்பர் ஸ்டாரானார் ரஜினி.

கமல் எப்படி ஏக் துஜே கேலியே படத்தின் மூலம் இந்தியிலும் ஹீரோவாக வெற்றிக்கொடி நாட்டினாரோ அதேபோல ரஜினியும் இந்தியில் அடிக்கடி பிரவேசித்துவிட்டுத்தான் வந்தார்.

விஜயகாந்துக்கு பெரும் திருப்புமுனையை கொடுத்த சட்டம் ஒரு இருட்டறை படம்தான் இந்தியில் அந்த கானூன் என ரீமேக் செய்யப்பட்டது. அதுதான் ரஜினிக்கு முதல் இந்திப்படம். நாடே கொண்டாடும் அமிதாப்பச்சன் கெஸ்ட் ரோல், அப்புறம் ஹேமமாலினி.. பிறகு கேட்கவேண்டுமா..தேசமெங்கும் வெற்றிகரமாகவே பேசியது அந்தா கானூன்.. அதன்பிறகும் பல இந்தி படங்களில் நடித்தார் ரஜினி.

ஆனால் இப்போது ஆச்சர்யம் என்னவென்றால் இந்தி படங்ள் வாயிலாக அல்ல, தமிழ் படங்கள் வாயிலாகவே இந்தியா முழுவதும் அறிந்த சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். வட நாட்டு முன்னணி ஸ்டார்கள்கூட, தலைவா என்றழைத்து ரஜினிக்கே ரசிகர்களாக மாறிப்போயிருக்கின்றனர். ரஜினியால் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை

ஷாருக்கான் தனது ரா ஒன் படத்தில் ரஜினி கொஞ்சம் தலைகாட்டினால் போதும் என்கிறார். அந்த அளவுக்கு வியப்பான திரையுலக ஆளுமையாக மாறிப்போயிருக்கிறார் ரஜினி..

அவர் நடிக்க ஆரம்பித்தபோது பிறந்தவர்கள்கூட கதாநாயகியாகி பின்னர் அம்மா ரோல்களுக்கு போய்விட்டார்கள்.. ஆனால் ரஜினி இன்னமும் பேத்தி வயதுடையவர்களுக்கு இணையாக தன்னை திரையில் பாத்திரத்திற்கு ஏற்ப தயார் படுத்திக்கொள்கிறார்.

இந்த தயார் படுத்திக்கொள்ளுதல் என்பது ரஜினிக்கு இன்று நேற்று வந்த கலையல்ல.. முரண்பாடான பாத்திரங்களை வெவ்வேறு படங்களில் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கும்.

ஒரு படத்தில் சிறுவனின் கண்களை குருடாக்கிவிட்டு அக்காவை பலாத்காரம் செய்வார்.. இன்னொரு படத்தில் உயிருக்கு உயிரான ஒரே தங்கையின் சாவுக்கு நாமே காரணமாகிவிட்டோமே என உருக வைப்பார். இரண்டு ரோல்களும் சில மாத இடைவெளிகளில் அடுத்தடுத்து செய்தவைதான்.

1970களின் ஸ்டைல் மட்டுமே ரஜினிக்கு பிரதானம் என்று நினைப்பவர்களுக்கு அவர் நடிப்பால் அசத்திய படங்களை தெரிந்திருக்குமா என்பது சந்தேகம். முத்துராமன், தேவிகா, கல்யாணகுமார் நடித்த ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம் படம் பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு கன்னடத்தில் ரீ மேக் செய்தபோது அதில் கல்யாணகுமாரின் டாக்டர் வேடத்தில் ரஜினிதான் நடித்தார். தமிழில் படம் முழுக்க அளவுக்கு மீறிய சோகமாய் வருடம் டாக்டர் பாத்திரத்தை வெகு இயல்பாக கச்சிதமாக செய்திருந்தார்.

ஏமாற்றிய காதலியை விளக்கம் கேட்கும் போது தமிழில் கல்யாணகுமார் கெஞ்சுவார். ஆனால் ரஜினியோ கெஞ்சாமல் கொஞ்சம் நக்கல், சலிப்பு, ‘ஆவேசம் பின்னர் அமைதி என நாயகி கன்னட மஞ்சுளாவிடம் கலந்து கட்டியடிப்பார்.

தெலுங்கில் அவர் செய்த சிக்கலமா செப்பண்டி என்ற படத்தைதான் பின்னர் தமிழில் நிழல் நிஜமாகிறது என கமல் செய்தார். தெலுங்கில் நண்பனின் சகோதரியான நாயகி சங்கீதா, ஆண்வாடையே பிடிக்காத ஒரு திமிர் பிடித்த பாத்திரம். ஆணாதிக்கவாதியான ரஜினி, திமிர் பிடித்த பெண்மையை சீண்டும் இடங்களிலெல்லாம் எல்லைக்கோடு கச்சிதமாக இருக்கும். ஆனால் தமிழில் சுமித்ராவை சீண்டும் காட்சிகளில் கமல் நடிப்பில் சற்று எரிச்சல் மேலோங்கும்.

இப்படி 70 களில் ரஜினிக்குள் இருந்த வெகு இயல்பான நடிப்பைத்தான், சூப்பர்ஸ்டார் என்ற இமேஜ் காவு வாங்கிக்கொண்டது.

தம்பிக்கு எந்த ஊரு படத்திற்கு பிறகு, வசூல் மன்னன் வட்டத்தை விட்டு அவரை வெளியேவிட தமிழ் சினிமா தயாராக இல்லை. அதையும் மீறி அடக்கிவைத்திருந்த ஆதங்கத்தையெல்லாம் வெளியே கொட்டுவதற்கு ஒரு வாய்ப்பாக கிடைத்தது தளபதி படம்..

ஆனாலும் மறுபடி மன்னன், அண்ணாமலை என மெகா ஹிட்டுக்கள் மேலேமேலேதான் தூக்கிக்கொண்டுபோயின.

இந்தியில் அமிதாப் நடித்த ஹம் படத்தில் போலீஸ் ஆபிசர் வேடத்தில் வந்தார் ரஜினி, அதையே தமிழில் ரீமேக் செய்தபோது ஹம் டைகர் அமிதாப்பைவிட பாட்சாவின் ஆட்டோ மாணிக்கம் பல மடங்கு ஆவேசத்தை அள்ளித்தெளித்திருப்பார். ஆனந்தராஜை அடித்துவிட்டு உள்ளே போ என்று சொல்லிக்கொண்டே ரஜினி பார்க்கும் பார்வை, உண்மையிலேயே நடிப்பு என வரும்போது அவரின் கண்கள் பேசும் பவரான பாஷைக்கு நிகர் கிடையவே கிடையாது.

1995ல் வரை கதைக்கான படங்களில் ரஜினி நடித்தார். சூப்பர் ஸ்டாருக்கு அவசியமாயிற்றே என தேவைப்படும் இடங்களில் மட்டும் லாஜிக் பார்க்காமல் பில்டப் வேலைகள் இருந்தன.

ஆனால் பாட்சாவின் உச்சபட்ச வெற்றிக்கு பிறகு, சென்சார் சர்ட்டிபிகேட்டுக்கும் சுபம் கார்டுக்கும் இடையில் ஒவ்வொரு பிரேமிலும் ரஜினி ரஜினி அவருக்காக மெனக்கெடும் வேலைகள்தான் படங்களில் அதிகமானது. முத்து, அருணாச்சலம், போன்றவையெல்லாம் அந்த ரகமே. படையப்பாவை நீலாம்பரி தூக்கி நிறுத்தாவிட்டால் அறுபடையப்பன் கதி சற்று சிக்கலாகவே போயிருக்கும்

ஆனால் விதி வலியது என்பது போல, அரசியல் படமும் இல்லாமல் ஆன்மிக படமுமாகவும் இல்லாமல் ரெண்டுங்கெட்டானான பாபாவில் கதம் கதம் ஆகிப்போனார் ரஜினி.

இனி சிந்தித்து செயல்படாவிட்டால் உண்மையிலேயே சினிமா வாழ்வும் கதம கதம் என்று எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டது ரஜினி.

நின்று நிதானித்து யோசித்து பார்த்து பழையபடி எல்லோருக்குமான ரஜினியாக இருப்பதுதான் நல்லது என்று அவருக்கு மனதில் பட்டது.

கங்கா, முருகேகன் படையோடு வந்த சந்திரமுகி, டாக்டர் சரவணனை நன்றாகவே பழைய உயரத்திற்கு கொண்டுபோனது.

ஆனால் அதன்பிறகு சிவாஜியில் தொடங்கி இன்று 2.0 வரை படத்துக்கு படம் பிரமாண்டம் கூடுகிறது. மாநில, தேச எல்லைகளை கடந்து வசூலும் உலக அளவில் பேசப்படுகிறது. அதே நேரத்தில் படங்களை நம்பி போட்ட பணத்தை அத்தனை தரப்பினரும் எடுத்தார்களா, எடுக்கிறார்களா என்ற சர்ச்சையும் சுழட்டி எடுக்கிறது.

(நிறைவு)