தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் மூலை முடுக்கெல்லாம் “ஸ்டார்ட்.. ஆக்‌ஷன்” ‘கட்’ என்ற ஓசையை இப்போது அதிகமாகவே கேட்க முடிகிறது. ஊரடங்கு காரணமாக முடங்கி கிடந்த ஸ்டூடியோக்கள் உயிர் பெற்றுள்ளன.

ஒட்டு மொத்த இந்திய சினிமா உலகமே, ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளது என சொன்னால், அது மிகை அல்ல.

பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களின் ஷுட்டிங் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ரஜினிகாந்த் நடிக்கும் ‘அன்னாத்த’ படப்பிடிப்பு அங்குள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் சில நாட்களுக்கு முன்பாக தொடங்கியது. மிகப்பெரிய கிராமத்தை அரங்காக அமைத்து ரஜினி உள்ளிட்டோர் நடிக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஐதராபாத் புறநகர் பகுதியில் சிரஞ்சீவி நடிக்கும் ‘ஆச்சார்யா’ படத்தின் ஷுட்டிங் கிராமத்து ‘செட்’டில் நடந்து வருகிறது. இதில் சிரஞ்சீவியுடன் காஜல் அகர்வாலும் பங்கேற்றுள்ளார்.

பிரபாஸ் நடிக்கும் ‘ராதேஷுயாம்’ படப்பிடிப்பு, ராமோஜி பிலிம் சிட்டி நிர்வாகத்தினர், ஐதராபாத் புறநகர் பகுதியில் அமைத்துள்ள ஸ்டுடியோவில் நடக்கிறது.

அஜய்தேவ் கான் நடித்து இயக்கும் இந்தி படமான ‘மே டே’ யஷ் நடிக்கும் கன்னடப்படமான ‘கேஜிஎஃப்- 2’, பவன் கல்யாண் நடிக்கும் வகீல்ஷாப், அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா, மற்றும் அகில், நாகசூர்யா உள்ளிட்டோர் படங்களின் படப்பிடிப்பும் அங்கு பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

அஜீத்தின் வலிமை ஷுட்டிங் அண்மையில் முடிந்த நிலையில் இன்னும் சில நாட்களில் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள தனுஷ். ஐதராபாத் செல்ல உள்ளார்.

பத்துக்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்பு நடந்தாலும் , அரசு விதிமுறைகள் காரணமாக சொற்ப தொழிலாளர்களே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

– பா. பாரதி