சென்னை

ஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என ரஜினி அறிவித்துள்ளது பாஜகவுக்கு இழப்பு உண்டாகும் எனக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதி மணி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தாம் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்ததில் இருந்து பல வித கருத்துக்கள் எழுந்த வண்ணம் இருந்தன.    சுமார் 26 ஆண்டுகளாக அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக கூறி வந்த அவர் வரும் 31 ஆம் தேதி கட்சி தொடக்கம் பற்றி அறிவிக்கப் போவதாகச் சொல்லி இருந்தார்.  பலரின் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று அவர் கட்சி தொடங்கப்போவதில்லை என இறுதி முடிவை அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜோதி மணி இது குறித்து, “என்னைப் பொறுத்த வரை ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்பது எவ்வித தாக்கமும் ஏற்படுத்தாது என எண்ணுகிறேன். காரணம் அவர் அரசியலுக்கு வருவது பெரும் தாக்கத்தை உண்டாக்குவதாக இருந்தால் மட்டுமே அரசியலுக்கு வராதது தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த நூற்றாண்டில் கொண்டாடப்பட வேண்டிய கலைஞரான ரஜினிகாந்த் தனது உடல்நிலையைக் கருதி இந்த முடிவை எடுத்திருந்தால் நான் அதை மதிக்கிறேன்.  ஜனநாயக நாட்டில் யாரும் அரசியல் கட்சி தொடங்கலாம் என்பதால் அதையும் நான் மதிக்கிறேன்.   அப்படி இருக்க அவர் அரசியலுக்கு வருவது குறித்து ஏன் விமர்சனங்கள் எழுகிறது என்பதை நாம் பார்க்க வேண்டும்.

ரஜினிகாந்த் தொடர்ந்து பாஜகவின் குரலாகத் தமிழகத்தில் இருக்கிறார்.  தமிழகத்தையே உலுக்கி தூத்துக்குடி   துப்பாக்கிச் சூடு சமயத்தில் அங்கு  போராடியவர்களை அவர் தீவிரவாதி எனச் சித்தரித்துள்ளார்.  ஊடகங்களில் அவர் பாஜகவால் மிரட்டி வலியுறுத்தி அரசியலுக்கு அழைத்து வரப்படுவதாகச் செய்திகள் வந்தன.   அவரது அறிகையில் தாம் உடல்நிலை சரியில்லை எனச் செய்திகள் வந்தது உண்மை எனவும் தாம் அந்த அறிக்கையை வெளியிடவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

அதன் பிறகு தமிழகத்துக்கு அமித்ஷா வந்து சென்ற பிறகு ரஜினிகாந்த் தமது உடல்நிலையைக் குறித்து கவலை இல்லை எனவும் உயிரைப் பயணம் வைத்து தமிழக மக்களைக் காக்க போவதாகச் சொன்னார்.  அதன் பிறகு திரும்பவும் உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரவில்லை எனச் சொல்கிறார்.

தமது உயிரைப் பணயம் வைக்கப்போவதாகச் சொன்ன ரஜினிகாந்த் தற்போது ரிஸ்க் எடுக்க முடியாது எனச் சொல்கிறார். இது அவருடைய உடல்நிலையைப் பொறுத்தது என்றால் அதை மதிக்கலாம்.  ரஜினிகாந்த் அறிவிப்பால் அரசியல் களத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.  ரஜினிகாந்த்தை பயன்படுத்தத் துடித்த பாஜகவுக்கு வேண்டுமானால் இழப்பு இருக்கலாம். மற்றபடி திமுக கூட்டணி தான் வெற்றி பெறும்” எனத் தெரிவித்துள்ளார்.