தனக்கு காவிச்சாயம் பூச பாஜக முயற்சி என்ற ரஜினி, ஒரு மணி நேரத்தில் ‘பல்டி’! இடைப்பட்ட நேரத்தில் நடைபெற்றது என்ன?

சென்னை:

னக்கு காவிச்சாயம் பூச பாஜக முயற்சி செய்கிறது என்று குற்றம் சாட்டிய, நடிகர் ரஜினிகாந்த், அடுத்த ஒருமணி நேரம் கழித்து மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தபோது, தனது முந்தையை கருத்துக்கு மாறான கருத்தை தெரிவித்து உள்ளார்.

தன்மீது சிலர் பாஜக சாயம் பூச நினைக்கிறார்கள் என்று பல்டியடித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இடைப்பட்ட ஒரு மணி நேரத்தில் என்ன நடைபெற்றது, ரஜினியை பாஜக தலைமை மிரட்டியதா? என்று சமூக வலைதளங்களில் கடுமையாக கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.

காலை 11.30 மணி அளவில் போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது திருவள்ளுவரை முன்வைத்து சர்ச்சைகள் எழுந்துள்ளது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்தவர், திருவள்ளுவர் ஒரு மிகப்பெரிய ஞானி, சித்தர் என்றும், அவர் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசியது போல் எனக்கு பா.ஜ.கவினர் காவிச்சாயம் பூச முயற்சிக்கிறார்கள், அதில், திருவள்ளுவரும் மாட்டமாட்டார் நானும் மாட்டமாட்டேன் என்று கூறினார்.

மக்கள் பிரச்சனைகள் ஏராளமாக உள்ளபோது திருவள்ளுவர் காவி குறித்த விவாதம் தேவையற்றது. திருவள்ளுவர் நாத்திகர் அல்ல ஆத்திகர் என்று கூறிய ரஜினி, பாஜகவில் சேரவோ, தலைவராகவோ என்னை யாரும் சந்திக்கவில்லை என்றார்.

மேலும், செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த ரஜினி, உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றம் போட்டியில்லை என்றும் தெரிவித்தார்.

அத்துடன் செய்தியாளர் சந்திப்பை முடித்துவிட்டு வீட்டுக்குள் புகுந்தவர் அடுத்த ஒரு மணி நேரத்தில் (சுமார் 12.30 மணி)  மீண்டும் செய்தியாளரை சந்தித்தார்.

அப்போது,  தமிழகத்தில் சரியான தலைமைக்கு தற்போதும் வெற்றிடம் உள்ளது என்று கூறிய ரஜினி,  தனக்கு, சிலர் பா.ஜ.க சாயம் பூச நினைக்கிறார்கள்; இது சகஜம் என்று கூறினார்.

திருவள்ளுவருக்கு காவி நிறம் உடை அணிவித்த‌து பாஜகவின் தனிப்பட்ட விவகாரம், இதை ஒரு சர்ச்சையாக்கி விவாதிப்பது வேடிக்கையாக உள்ளது.  திருவள்ளுவர் ஒரு ஞானி, சித்தர், அவரை ஜாதி, மதத்திற்குள் அடைக்க முடியாது. திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியதை ஊடகங்கள் பெரிதாக்கிவிட்டன என்று கூறியவர்,  திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கையுடன் இருந்தவர், அதை யாரும் மறைக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது என்றார்.

மற்றொரு கேள்விக்கு, பாஜகவின் இணைவது தொடர்பாக பொன்.ராதாகிருஷ்ணன் என்னை அணுகவில்லை என்று மறுப்பு தெரிவித்தவர், நான் எப்போதும் வெளிப்படையாக பேசி வருகிறேன் என்றவர், நான் கட்சி தொடங்கும் வரை சினிமாவில் நடிப்பேன் என்று கூறினார்.

மேலும், அயோத்தி வழக்கு தொடர்பான கேள்விக்கு  அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று கூறினார்.

சுமார் 1மணி நேரத்தில், ரஜினி பாஜக மீதான தனது கருத்தை மாற்றி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தலைமைக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்து வரும் நடிகர் ரஜினிகாந்த்,  இன்றைய முதல் செய்தியாளர் சந்திப்பின்போது, தன்மீது காவியை பூச பாஜக முயற்சி செய்கிறது என்று குற்றம் சாட்டியவர்,

அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து, தனக்கு, சிலர் பா.ஜ.க சாயம் பூச நினைக்கிறார்கள் என்று மாற்றி பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இடைப்பட்ட ஒரு மணி நேரத்தில் என்ன நடந்தது?  ரஜினிக்கு பாஜகவில் இருந்து அழுத்தம் தரப்பட்டதா?  என்று கேள்வி எழுந்துள்ளது. ரஜினிக்கு சமீபத்தில்தான் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி, அவரை பாஜக ஐஸ் வைத்துள்ள நிலையில், ரஜினி மாற்றி மாற்றி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக கூறி, தனது ரசிகர்மன்றங்களை ஏமாற்றி, தொடர்ந்து படங்களில் நடித்து கல்லாகட்டி வரும் ரஜினிகாந்த்,  ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து, அரசியல் கட்சி தொடங்குவதுபோல பாசாங்கு செய்து, தனது படத்தை, வெற்றிப்படமாக்கி பணத்தை குவித்து வரும் நிலையில்,

சமீபகாலமாக பாஜக அரசின் திட்டங்களை வரவேற்று பேசி, பாஜகவின் ஊதுகுழலாகவே மாறியிருந்தார். இந்த நிலையில், இன்று முற்பகலில் சுமார் 1 மணி நேர இடைவேளையில் அவர் மாற்றி மாற்றி பேசியிருப்பது, அவரின் அரசியல் தெளிவற்ற தன்மையை நிரூபித்து உள்ளது. 

கார்ட்டூன் கேலரி