மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் ரஜினி….!

ரஜினிகாந்த் உடல்நிலை பயம்படும்படி ஒன்றுமில்லை என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஐதராபாத்தில் நடைபெற்ற அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்  வெள்ளிக்கிழமை காலை அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், ரஜினிக்கு மேலும் சில பரிசோதனைகள் செய்ய உள்ளதாகவும், பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் டிஸ்சார்ஜ் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என மருத்துவமனை கூறியது. .

ரஜினிக்கு மேலும் சில பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதிலும் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிய வந்துள்ளதாக இன்று காலை தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

ஒரு வாரத்திற்கு முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது. ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் ஒரு வாரத்துக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது. கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்புள்ள சூழலை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. மனஅழுத்தம், படப்பிடிப்பு, உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை குறைத்துக் கொள்ள நடிகர் ரஜினிக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.