தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சி தொடங்க திட்டமிட்ட ரஜினிகாந்த், அண்மையில் சென்னையில் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

தான் சிறுநீரக ஆபரேஷன் செய்துள்ளதால், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், கட்சி ஆரம்பிக்கும் விஷயத்தில் மன்ற நிர்வாகிகள் கருத்து கூறுமாறு கேட்டுக்கொண்டார்.

“நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் கட்டுப்படுகிறோம்” என நிர்வாகிகள் கூறிய நிலையில், ரஜினிகாந்த், தனது போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்த படி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன், ரஜினியை சந்தித்து பேசினார்.

பின்னர் பேட்டி அளித்த மணியன், ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பது எனக்கு தெரியாது. அவர் தான் முடிவு செய்வார். எந்த முடிவு எடுத்தாலும், உங்கள் உடல் நலத்தை பாதிக்காத வகையில் முடிவு எடுங்கள் என ரஜினியிடம் சொன்னேன்” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ரஜினிகாந்த், தனது மன்றத்து ஆட்கள், நீண்டகால நண்பர்கள் என பல தரப்பினரிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். போனிலும், நேரிலுமாக இந்த உரையாடல் நிகழ்கிறது.

ரஜினியுடன் பேசியவர்கள், அவரது எண்ண ஓட்டம் குறித்து தெரிவித்த ஒருமித்த கருத்து இது:

“கட்சி தொடங்கினால், மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாட வேண்டும் என்பது ரஜினியின் விருப்பம். காணொலி காட்சி மூலம் மக்களுடன் உரையாடுவதில் அவருக்கு இஷ்டம் இல்லை. நேரில் செல்லக்கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளதால், கட்சி தொடங்கும் விஷயத்தில் அவர் குழப்பத்தில் உள்ளார்” இவ்வாறு தெரிவித்துள்ள ரஜினியின் நண்பர்கள் “தனது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதிக்குள் எப்படியும் தீர்மானமான முடிவுக்கு வந்து விடுவார்” என மேலும் கூறினர்.

– பா. பாரதி