மேன் வெர்சஸ் வைல்ட் படப்பிடிப்பில் காயம்: சளைக்காமல் படப்பிடிப்பை முடித்து கொடுத்த ரஜினிகாந்த்

--

பந்திப்புரா: மேன் வெர்சஸ் வைல்ட் ஆவணப் படத்தின் படப்பிடிப்பில் காயம் ஏற்பட்ட போதிலும் திட்டமிட்டப்படி, படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டார் ரஜினிகாந்த்.

உலகம் முழுதும் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று மேன் வெர்சஸ் வைல்டு என்ற நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் அண்மையில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதற்கு பிறகு இப்போது நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். அவர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் நடைபெற்று வருகிறது.

பேர் கிரில்ஸுடன் ரஜினிகாந்த் 2 நாட்கள் படப்பில் கலந்துகொள்வதாக தகவல்கள் வெளியாகின. படப்பிடிப்பிற்காக கர்நாடகாவில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் ரஜினி இன்று படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தார்.

அப்போது அவருக்கு தோள் பட்டையில் காயம் ஏற்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆங்கில ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் கர்நாடக மாநிலம் பந்திபுரா வனப் பகுதியில் ஹூட்டிங் நடந்தபோது தோளில் லேசான காயம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. ரஜினியின் காயத்தை தொடர்ந்து, மேன் வெர்சஸ் வைல்டு படப்பிடிப்பு நடக்குமா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் காயத்தை பொருட்படுத்தாது தமது போர்ஷனை சிறப்பாக முடித்து கொடுத்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். படப்பிடிப்பு முடிந்த பின்னர், வனத்துறை மற்றும் குழுவினருடன் அவர் எடுத்துக் கொண்ட குழு புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

படப்பிடிப்பு குழுவினருடன், வனத்துறை அதிகாரிகளுடனும் பேர் கிரில்ஸும், நடிகர் ரஜினிகாந்தும் கைகுலுக்கி பரஸ்பரம் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர். ரஜினியின் உடல்நிலை நன்றாக இருப்பதோடு, ஷூட்டிங்கையும் தடங்கல் இல்லாமல் முடித்துக் கொடுத்து இருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.