மன்ற உறுப்பினர்களை சேர்க்க ரஜினி புதிய வெப்சைட்

 

சென்னை,

ரசியலுக்கு வருவேன் என்று அறிவித்த ரஜினிகாந்த், இன்று புதிய இணையதளத்தை தொடங்கி உள்ளார்.

அதில்,

நல்லதே  நினைப்போம். நல்லதே  பேசுவோம்.
நல்லதே  செய்வோம். நல்லதே  நடக்கும்!
வாழ்க தமிழ்! வெல்க தமிழ்குடி!

இந்த இணையதள செயலி மற்றும் வலைதள பக்கத்தில் உங்களை மன்றத்தின் உறுப்பினராக வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த செயலி நம்மிடையே தகவல் பரிமாற்றத்திற் கான  ஊடகமாக மட்டுமின்றி, தமிழ்நாட்டில் நல்லதொரு மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு கருவியாகவும் செயல்படும்.

உங்கள் அனைவருடைய ஒத்துழைப்புடனும்,நல் ஆதரவுடனும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் வளமான ஒரு தமிழ்நாட்டை உருவாக்குவோம்.

நன்றி! வணக்கம்!

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

நான் அரசியலுக்கு வருவேன் என நடிகர் ரஜினி  வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் எனவும் அதற்கு முன்பு ஒவ்வொரு தெருவிலும் தனது ரசிகர் மன்றம் தொடங்கப்பட வேண்டும் எனவும் ரசிகர்களிடம் குறிப்பிட்டார்.

உண்மை, உழைப்பு, உயர்வு இதுதான் தாரக மந்திரம். நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும். இதுதான் நமது கொள்கை. வரும் தேர்தலில், நம்ம படையும் இருக்கும் என்றும், தனது அரசியல் ஆன்மிக அரசியல் என்றும் கூறியிருந்தார்.

நேற்று அரசியல் குறித்து அறிவித்த நிலையில், இன்று தமது அரசியல் கட்சிக்கு ஆதரவாக புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளார் ரஜினி.

தமது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்க  http://www.rajinimandram.org/ என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளார்.

மேலும் தனது அரசியல் பிரவேசத்திற்கு வரவேற்பு தெரிவித்திருக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத ரசிகர் மன்ற உறுப்பினர்கள் தங்கள் மன்றத்தின் விபரங்களுடனும் மற்றும் நல்ல அரசியல் மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் தங்களின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் கொண்டு இணையதள பக்கத்தில் பதிவு செய்து கொண்டு உறுப்பினர் ஆகலாம் எனவும் நாம் அனைவரும் சேர்ந்து தமிழ்நாட்டில் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.