கட்சி தொடங்குவது குறித்து ரஜினி நாளை ஆலோசனை

சென்னை: 

புதிய கட்சி தொடங்குவது குறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நாளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் வரும் ஏப்ரல் மாதம் புதிய கட்சி தொடங்குவர் என்று அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், கட்சி தொடங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளதாக ரஜினிகாந்தின் சகோதரர் சத்திய நாராயாண ராவ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ரஜின் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. மேலும் அந்த அறிவிப்பில் நாளை காலை பத்து மணிக்கு ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது, புதிய கட்சி தொடங்குவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், தமிழகம் முழுவதும் உள்ள தமது ரசிகர் மன்றங்களின் நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த நேரில் சந்தித்தார். அப்போது, மாவட்டவாரியாக ரஜினியை சந்தித்த நிர்வாகிகள், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது, “தான் புதிய கட்சியை தொடங்கி, 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளோம்” என்ற ரஜினி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.