சென்னை :

தான் பிறந்தது கர்நாடகாவில் இருந்தாலும், 44 ஆண்டுகளாக தமிழகத்தில் வாழ்ந்தகு வருவதால் தான் பச்சைத் தமிழன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

எட்டு வருடங்களுக்குப் பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட வாரியாக அவர்களுடன் ஒளிப்படம் எடுத்து வருகிறார். கடைசி நாளான இன்று ரசிகர்கள் மத்தியில் மீண்டும் ரஜினி பேசினார்.

அப்போது அவர், “நான்ன் தமிழனா என்று சமூக வலைதளங்கள் மற்றும் டுவிட்டரில் வெளியாகும் தரமற்ற விமர்சனங்கள் வருத்தமளிக்கின்றன. எனக்கு 67 வயதாகிறது, 23 ஆண்டு தான் கர்நாடகாவில் இருந்தேன் எஞ்சிய 44 ஆண்டுகள் தமிழ்நாட்டில் உங்கள் கூடவே வளர்ந்தேன். கர்நாடகத்தில் இருந்து மாராட்டியராக வந்திருந்தாலும் பேரும் புகழும் அள்ளிக்கொடுத்து என்னை தமிழனாக்கி விட்டீர்கள், அதனால் நான் பச்சைத் தமிழன்”.

“என்னை எங்கேயாவது போ என்று வெளியே தூக்கிப் போட்டால் இமயமலையில் தான் வீழ்வேனே தவிர வேறு மாநிலத்திற்கு போக மாட்டேன். உயிரோடு இருந்தால் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும், இல்லாவிடில் சிவன் இருக்கும் இமயமலைக்கு செல்ல வேண்டும். என்னை வாழ வைத்து அழகு பார்த்த உங்களை விட்டு நான் ஏன் செல்ல வேண்டும்” என்று ரஜினிகாந்த் பேசினார்.