சென்னை: ரஜினிகாந்த் அரசியல் நிலைப்பாடு குறித்து இன்று மாலை அல்லது நாளை ரஜினிகாந்த் ஊடகங்கள் மூலமாக அறிவிப்பார் என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி தெரிவித்து உள்ளார்.

அரசியலுக்கு வருவதாக அறிவித்த ரஜினி 3ஆண்டுகளை கடந்தும், இதுவரை உறுதியான முடிவு அறிவிக்க முடியாமல் குழம்பி வருகிறார். தமிழக சட்டமன்ற தேர்தலும் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், இன்று திடீரென மாவட்ட செயலாளர்களுடன் இன்று  சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார்.

சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், மக்கள் மன்ற நிர்வாகிகள் பலர், ரஜினி கட்சி பெயரை அறிவிக்க வேண்டும் என்றும், தேர்தலில் போட்டியிடுவது மட்டுமின்றி, ரஜினியே முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

அவர்களுடன் பேசிய ரஜினி,   மக்கள் மன்ற நிர்வாகிகள் பலரது  செயல்பாடுகள்  அதிருப்தி  அளிக்கும் வகையில் இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் அரசியல் தொடர்பாக தாம் முடிவு எடுத்து அறிவிக்கும் வரை பொறுத்திருங்கள் என்றும் ரஜினிகாந்த் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்,  ரஜினியுடனான, ஆலோசனை கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர், எங்களுடைய கருத்துகளை தெரிவித்தோம். அதை, ரஜினி கவனமுடன்கேட்டுக்கொண்டார்.   ரஜினிகாந்த் அரசியலுக்கு  வரவேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி இருக்கிறோம் என்றவர், ரஜினிகாந்த் தமது அரசியல் நிலைப்பாடு தொடர்பாக இன்று மாலை அல்லது நாளை செய்தியாளர்கள் மூலமாக அறிவிப்பார். அந்த முடிவு நல்ல முடிவாகவே இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் . ரஜினிகாந்த் எந்த முடிவு எடுத்தாலும் ஏற்றுக் கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரஜினிகாந்த் மக்கள் மன்ற நிர்வாகியின் நம்பிக்கை உண்மையாகுமா? பொய்த்துபோகுமா என்பது விரைவில் தெரிய வரும்.