சென்னை: அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த், ஜனவரி 21ந்தேதி அன்று அதிகாரப்பூர்வமாக தனது கட்சியின் பெயர், கொடி, சின்னம் தொடர்பாக அறிவிப்பார் என நம்பப்படுகிறது. அன்றைய தினம், ரஜினிக்கு பிடித்தமானதும், ராசியானதுமான  வியாழக்கிழமை அன்றும் கூறப்படுகிறது.

அவ்வப்போது அரசியல் பஞ்ச் பேசி ரசிகர்களை உசுப்பேத்தி வந்த ரஜினிகாந்த், கடந்த 2017ம் ஆண்டு கட்சித்தொடங்கப்போவதாக அறிவித்தார்.  பின்னர் 3 ஆண்டுகள் கழித்து தற்போது, வரும் ஜனவரி மாதம் கட்சித் தொடங்குவேன் என்றும் டிசம்பர் மாதம் 31-ம் தேதி கட்சி தொடங்கும் தேதி அறிவிப்பேன் என்று  அறிவித்தார். இந்த நிலையில், ரஜினிகாந்த் தொடங்க உள்ள கட்சியின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழருவி மணியனும், தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜூன மூர்த்தியையும் நியமித்துள்ளார். தொடர்ந்து பல்வேறு நபர்களுடன் ரஜினி ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும், கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன. மேலும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள சின்னங்கள் பட்டியலையும் ரஜினிகாந்த் ஆய்வு செய்து வருவதாக கூறப்பட்டது.

ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ரஜினிக்கு ராகவேந்திரர் மீது தனி பற்று உண்டு. அதன் காரணமாக அவருக்கு உகந்தநாளான வியாழக்கிழமையாகவும், ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர்  12ந்தேதி. அதன் கூட்டுத்தொகை -3.  அந்த அடிப்படையில் மூன்று தான் அவருக்கு ராசியான எண். அதனால், தனது ராசியான எண்ணான 3ம் வரும் நாளில் கட்சி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருப்பதாக போயஸ்கார்டன் வட்டார தகவல்கள் கசிந்துள்ளன.

ரஜினி அறிவிக்கும் முக்கிய அறிவிப்புகள் பெரும்பாலும், அவரது ராசி எண்ணான 3 வரும் நாட்களிலும், வியாழக்கிழமைகளிலுமே வெளியாவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதுபோலவே,  நவம்பர் 30-ஆம் தேதி தனது மக்கள் மன்ற  நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியவர் டிசம்பர் 3 ஆம் தேதி கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், அவரது கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஜனவரி 21ந்தேதிதான் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.  ஆன்மிகம், ஜோதிட நம்பிக்கையில் ஈடுபாடுள்ள ரஜினி, அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்குள் அண்ணாத்த பட வேலைகளை முடிக்கவும் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில், ரஜினியின் சாய்ஸ் ஜனவரி 21-ஆம் தேதி என்று கூறப்படுகிறது. ஏனென்றால், அன்றைய தினம் ரஜினியின் ராசியான எண் 3 வருவதுடன், வியாழக்கிழமையாகவும் உள்ளது. எனவே ரஜினி இந்த நாளில் தான் கட்சி தொடங்குவது தொடர்பான அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என நம்பப்படுகிறது.

அதுபோல ரஜினி அரசியல் கட்சியின் சின்னமாக அவரது பாபா முத்திரையே இடம்பெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த சின்னத்துடன்தான் ரஜினியின் மக்கள் மன்றம் செயல்பட்டு வருவதால், ஓரளவு மக்களிடையே பிரபலமடைந்துள்ள அதே சின்னத்தை தனது கட்சிக்கும் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.