நாளை காலை 10.30 மணிக்கு பிரஸ் மீட்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ரஜினிகாந்த்

சென்னை: ரஜினிகாந்த் நாளை காலை 10.30 மணியளவில் சென்னையில் செய்தியாளர்களை சந்திக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சி தொடங்குவதில் உறுதியாக இருக்கும் ரஜினிகாந்த் அதற்கான பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமது கட்சி போட்டியிடும் என்று ஏற்கனவே அறிவித்து விட்டார்.

கடந்த வாரம் தமது ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தி இருக்கிறார். 2வது கட்டமாக நாளை மீண்டும் மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.

அதே நேரத்தில், கட்சி பற்றிய முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகின. அதை உறுதிப்படுத்தும் வகையில் நாளை ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திக்கிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலான லீலா பேலசில் காலை 10.30 மணியளவில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அனைத்து பத்திரிகைகள், ஊடகங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு இருக்கிறது. அனைத்து செய்தியாளர்களும் கட்டாயம் தங்கள் அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.