ரஜினியின் “பாதுகாப்பு” கருதி “அண்ணாத்தே” படப்பிடிப்பு மீண்டும் தள்ளிவைப்பு….

 

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 168 –வது திரைப்படம் “அண்ணாத்தே”.

சன் குழுமம் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினிக்கு மனைவியாக நயன்தாராவும், தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார்கள். குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திர கூட்டமே இந்த படத்தில் நடிக்கிறது.

ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது.

தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த பிப்ரவரி, மாதம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 23 ஆம் தேதி ஐதராபாத்தில் மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக புதிதாக அரங்கம் அமைக்கப்பட்டு, அரசாங்கத்திடம் முறைப்படி அனுமதியும் பெறப்பட்டது.

இந்த படப்பிடிப்புக்கு , தொழில்நுட்ப கலைஞர்கள், துணை நடிகர்கள் என 200 க்கும் மேற்பட்டோர், தேவைப்படுவதால், சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாது.

ரஜினிக்கு 69 வயது ஆகும் நிலையில், இவ்வளவு பெரிய கூட்டத்துக்கு மத்தியில் அவரை நடிக்க வைப்பது பாதுகாப்பாக இருக்காது என படக்குழு கருதியது. இதனால் படப்பிடிப்பு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் முதல் பாதி படப்பிடிப்பு முழுவதும் முடிந்து, அந்த காட்சிகள் “எடிட்” செய்யப்பட்டுள்ளன.

இன்னும் 40 சதவீத ஷுட்டிங் நடந்தால், படம் முழுமையாக முடிவடைந்து விடும் என்ற நிலையில், படப்பிடிப்பை தள்ளிவைத்துள்ளனர், மீண்டும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது தெரியவில்லை.

– பா.பாரதி