கோலாகலமாக நடைபெற்ற ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா – விசாகன் திருமணம்: இபிஎஸ், ஓபிஎஸ் பங்கேற்பு

சென்னை:

டிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் விசாகனுக்கும் இன்று காலை சென்னை லீலா பேலஸ் ஓட்டலில்  கோலாகலமாக மறுமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கும் கோவை தொழிலபதிபர் விசாகனுக்கும் ஏற்கனவே  திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 8-ந்தேதி  ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி விருந்து நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. அப்போது கலந்து கொண்டவர்களுக்கு   ரஜினி விதை பந்து கொண்ட தாம்பூலப்பை கொடுத்தனர்.

அதையடுத்து கடந்த 8ந்தேதி போயஸ் கார்டனில் உள்ள  ரஜினி வீட்டில் ராதா கல்யாண வைபவம் நடந்தது. இதில் ரஜினியின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர்.   அதைத்தொடர்ந்து மெகந்தி பங்ஷன் உள்பட பல்வேறு சடங்குகள் நடைபெற்றது.  இதிலும் உறவினர்கள் மட்டுமே பங்கேற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை சென்னை லீலா பேலஸ் ஓட்டலில்  சவுந்தர்யா-விசாகன் திருமணம்  இனிதே நடைபெற்றது.

இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர்  ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வேலுமணி, தங்கமணி மற்றும் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

மற்றும்,  நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, விக்ரம்பிரபு, தனுஷ், ராம்குமார், கவிஞர் வைரமுத்து, இசை அமைப்பாளர் அனிருத், மு.க.அழகிரி, இயக்குநர் செல்வராகவன், லாரன்ஸ், எஸ்.ஏ. சந்திரசேகர், பிரேம்குமார், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, லக்‌ஷ்மி மஞ்சு, நடிகைகள் அதிதி ராவ் ஹிடாரி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நெருங்கிய உறவினர்கள், முக்கிய நண்பர்களும் திருமணத்தில் பங்கேற்றனர்.  இன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

ரஜினி மகள் திருமணத்தையொட்டி, அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.