தமிழக அரசியலில் பரபரப்பு: விஜயகாந்துடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு

சென்னை:

தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் ரஜினிகாந்த் இன்று திடீரென சந்தித்து பேசினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி விறுவிறுப்படைந்து வரும் நிலையில், தேமு திகவை இழுக்க அதிமுக மற்றும் திமுக கூட்டணிகள் வலைவீசி வருகின்றன. ஆனால், தாங்கள் கேட்டதை கொடுக்க வேண்டும் என்று டிமாண்ட் செய்யும் தேமுதிக இரு அணிகளுக்கும் பிடி கொடுக்காமல் இருந்து வருகிறது. இதற்கிடையில் டிடிவி தினகரனுடனும் திரைமறைவில் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வரும் 26ந்தேதி முதல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் விநியோகம் செய்யப்படும் என்றும் தனது கட்சியினருக்கு அறிவித்து உள்ளது. இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், பாராளு மன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவில்லை என்று அறிவித்து விட்ட நிலையில், இன்று திடீரென விஜயகாந்தை சந்தித்து பேசினார்.

இந்த தகவல் வெளியானதும் அரசியல் கட்சிகள் விறுவிறுப்படைந்தன. ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்தை சந்தித்து பேசியது குறித்து கூறும்போது, இருவரும்  அரசியல் பேசினோம் என்று தெரிவித்திருந்த நிலையில், தற்போது ரஜினிகாந்த் திடீரென விஜயகாந்தை சந்தித்து பேசியது அரசியல் கட்சியினர்களின் புருவங்களை உயர்த்த செய்துள்ளது.

விஜயகாந்தின் சாலிகிராமம் வீட்டுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்தை, பிரேமலதா விஜயகாந்த் வரவேற்றார். அதைத்தொடர்ந்து விஜயகாந்தை சந்தித்து சில நிமிடங்கள் ரஜினிகாந்த் பேசிக் கொண்டிருந்தார்.

இந்த சந்திப்பு தனிப்பட்ட சந்திப்பு என்றும்,  அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ள விஜயகாந்திடம்  உடல் நலம் குறித்து விசாரிக்க ரஜினிகாந்த் வந்திருந்தார் என்று தேமுதிக தரப்பில் இருந்த தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இருந்தாலும் கமல் கூறியபடி 3வது அணி தொடர்பாக அவர்கள் பேசியிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் மற்றொரு தகவல் பரவி வருகிறது. இந்தச் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த சந்திப்பு குறித்து கூறிய ரஜினிகாந்த், இந்த  சந்திப்பின்போது அரசியல் பற்றி பேசவில்லை. அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக மட்டுமே வந்தேன் என்றார். நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது என்னை முதலில் வந்து சந்தித்தவர் விஜயகாந்த்தான் என்றும் கூறினார்.