பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை ஆதரித்து மீண்டும் ரஜினி ட்விட்டியிருப்பது, கமலுக்கு எதிரான சிக்னலே என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அரசியலுக்கு வருவதாக நீண்டகாலமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் ரஜினி இன்று வரை தெளிவான முடிவு எடுத்ததாக தெரியவல்லை. சமீபத்தில் ரசிகர்களைக் கூட்டி, “ஆறு.. போர்..” என்றெல்லாம் பஞ்ச் டயலாக்காக பேசினார். இதையடுத்து அவர் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் கிளம்பியது. அதற்கேற்றாற்போல நடிகை கஸ்தூரி, அர்ஜூன் சம்பத், தமிழருவி மணியன் போன்ற சிலரிடம் அரசியல் ஆலோசனை செய்தார். ரஜினியின் அரசியல் வருகை குறித்து திருச்சியில் தமிழருவி மணியன் மாநாடு நடத்தினார்.

ஆனால் இடையில் மீண்டும் ரஜினி அமைதியாகி விட்டார்.

ஆனால், “அரசியலில் ஈடுபாடு உண்டு. ஆனால் தேர்தல் அரசியலுக்கு வரமாட்டேன்” என்று வெளிப்படையாக அறித்தவர் கமல். சமீபமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக அரசை அவர் விமர்சிக்க.. அமைச்சர்கள் பதிலுக்கு கமலை விமர்சிக்க..தற்போது ஊழலுக்கு எதிராக அவதாரம் எடுத்துவிட்டார் கமல்.

கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார். அதோடு, சென்னை வந்த டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கமலை சந்தித்ததும் நடந்தது.

தற்போது, “தனிக்கட்சி துவங்குவேன்… முதல்வர் ஆவேன்” என்று சொல்லும் அளவுக்கு வந்துவிட்டார் கமல்.

ரஜினிதான் முதலில் அரசியலுக்கு வருவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் கமல் முந்திக்கொண்டார்.

இந்த நிலையில்தான், பிரதமரின் தூய்மை திட்டத்தை ஆதரித்து ரஜினி இரண்டாவது முறை ட்விட்டியிருக்கிறார். இதை, “கமலுக்கு எதிரான தனது போக்கை மறைமுகமாக பதிவு செய்திருக்கிறார் ரஜினி” என்று அரசியல் வட்டாரத்தில் சொல்கிறார்கள்.
இப்படிச் சொல்பவர்களின் விளக்கம் இதுதான்:

“ரஜினி தான் அரசியலுக்கு வரப்போவதாக ஒரு எதிர்பார்ப்பை நீண்டகாலமாக ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் நடிகை கஸ்தூரி, அர்ஜூன் சம்பத் உட்பட சிலருடன் அரசியல் ஆலோசனையும் செய்தார். ஆனால் தனது அரசியல் திட்டம், கொள்கை குறித்து தெளிவாக எதுவும் அறிவிக்கவில்லை.

ஆனால் கமல்ஹாசனோ தனது அரசியல் பாதையை மறைமுகமாக ஆனால் அழுத்தமாக தெரிவித்துவருகிறார்.

சமீபத்தில் சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயனை கமல் சந்தித்தார். அப்போது, “நாங்கள் அரசியல்தான் பேசினோம் ,நான் காவி சிந்தனைக்கு எதிரானவன்” என்று வெளிப்படையாக கமல் தெரிவித்தார்.

அதே போல டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நேற்று அரசியல் ஆலோசனை செய்தார். கெஜ்ரிவாலும், மதவாத அரசியலுக்கு எதிரானவர்.

தற்போது கமல்ஹாசன் எப்போது தனிக்கட்சி அறிவிப்பு வெளியிடுவார் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இது ரஜினியை சிந்திக்க வைத்திருக்கலாம். தவிர, சமீபத்தில் ரஜினியுடன் இணைந்து பணியாற்ற தயார் என்று கமல் அறிவித்தார். இது, கமலுக்கு ரஜினி ஆதரவு கொடுக்கும் சூழலை உருவாக்கும் நிலையை ஏற்படுத்தியது.

இதையெல்லாம் யோசித்துதான் தனது கருத்தை வெளிப்படுத்தும் விதமாக ரஜினி ட்விட்டியிருக்கிறார். அதாவது பிரதமர் மோடியின் சுகாதார திட்டத்தை பாரட்டியிருக்கிறார்.
இதன் மூலம், “காவிக்கு எதிரான கமலுக்கு நான் எதிர்ப்பக்கம்தான்” என்பதை ரஜினி சொல்லியிருக்கிறார்” என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.