ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் இல்லையா? : மீண்டும் கிளம்பி உள்ள சர்ச்சை

சென்னை

ஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து மீண்டும் சர்ச்சை கிளம்பி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் நுழைவு குறித்து அடிக்கடி பல ஊகங்கள் கிளம்புவது வழக்கமாக உள்ளது.   சமீபத்தில் அவர் வெளியிட்டதாக ஒரு அறிக்கை வெளியானது.   அதில் அவர் அமெரிக்காவில் கடந்த 2016 ஆம் வருடம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்டதாகவும் அப்போது அவரை மருத்துவர்கள் அரசியலில் நுழையத் தடை விதித்ததாகவும் கூறப்பட்டது.

இதையொட்டி அவர் அரசியலில் நுழைய மாட்டார் எனத் தகவல்கள் தெரிவித்தன.   மேலும் தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் அவருடைய உடல் நிலை காரணமாக அதிகம் பயணம் செய்ய முடியாது எனக் காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் இந்த அறிக்கையைத் தாம் வெளியிடவில்லை என ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்திருந்தார்.

ரஜினிகாந்த் அந்த அறிக்கையில் தமது உடல்நிலை குறித்து வெளியான தகவல் உண்மை எனவும் ஆனால் அறிக்கையைத் தாம் வெளியிடவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.  மேலும் அவர் தமது அரசியல் பிரவேசம் குறித்துச் சரியான வேளையில் அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  இது கடும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.

இது குறித்து அரசியல் ஆர்வலர் ஒருவர், ”ரஜினிகாந்த் ஒரு படத்தில் மாப்பிள்ளை நான் இல்லை ஆனால் அவருடைய சட்டை என்னுது’ என்பார்.   இதே நிலை அவரது அறிக்கை குறித்தும் தெரிவித்துள்ளார்.  இதைப் போல் மற்றொரு படத்தில் ’நான்  எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. வர வேண்டிய நேரத்தில் வருவேன்’ என்பார்.   அந்த வசனத்தை மீண்டும் சொல்லி உள்ளார்” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.