ரஜினி தூத்துக்குடி விசிட்: அரசியல் பிரமுகர்கள் கருத்து

 

நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்று துப்பாக்கிச்சூட்டினால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து வருகிறார்கள். இது குறித்து அரசியல் பிரமுகர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

தமிழருவி மணியன்:

“அரசியல் அறிவிப்புக்கு பிறகே கள நடவடிக்கைகள் என்று கூறிய ரஜினி, தற்போது அரசியில் அறிவிப்புக்கு முன்னதாகவே தூத்துக்குடி செல்கிறாரே ரஜினி என்று சிலர் விமர்சிக்கிறார்கள்.  விமர்சிப்பவர்கள் எதை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டால் தங்கள் கடைகளை மூட வேண்டியிருக்கும் என்று பயப்படும் அரசியல்வாதிகள் தான் இப்படிப் பேசி வருகிறார்கள்.

நேற்று நடந்தது என்ன என்பதை ஆராய்வதைவிட இனி என்ன செய்யவேண்டும் என்பதையே நாம் சிந்திக்க வேண்டும்.

ரஜினி எப்போதுமே மக்கள் நலம் சார்ந்து சிந்திப்பவர். அதற்காகவே அரசியலுக்கு வந்திருக்கிறார்.  அவர் என்னிடம் பேசும்போது பல முறை, கூறிய ஒரு விசயம் உண்டு. நாற்பது நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் தங்குவதற்கு இடம் இல்லாமல் சாலை ஓரத்தில் படுத்து உறங்கிய தனக்கு பெரும்  புகழும் செல்வமும் தந்த  தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பார். அந்த நோக்கத்தின் ஒரு பகுதியே ரஜினியின் தூத்துக்குடி விசிட்.

திருமாவளவன்:

தனது திரைப்பட வெற்றிகளுக்காகவே அரசியல் குறித்து அவ்வப்போது ரஜினி பேசுகிறார் என்ற ஒரு பேச்சு இன்னமும் இருக்கிறது.

இந்த நிலையில் தூத்துக்குடி மக்களை சந்திக்க ரஜினி சென்றிருப்பது, அவர் தீவிர அரசியலில் ஈடுபட தயாராகிவிட்டார் என்பதை உணர்த்துகிறது.  பாதிக்கப்பட்ட மக்களை அவர் சந்திப்பது ஆறுதலாக இருக்கிறது. மகிழ்ச்சி அடைகிறேன்.

தூத்துக்குடி மக்களை அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்தபோதெல்லாம், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றுதான் கோரிக்கை வைத்தார்கள். தற்போது அந்த ஆலையை மூடுவதாக மாநில அரசு அறிவித்திருந்தாலும் அது நம்பத்தகுந்ததாக இல்லை.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட ரஜினியும் குரல் கொடுக்க வேண்டும்

வைகைச் செல்வன்

துப்பாக்கிச்சூட்டால் காயமடைந்திருக்கும் மக்களை ஒரு நடிகன் என்ற முறையில் சந்திக்க செல்வதாக ரஜினி தெரிவித்திருக்கிறார். அதாவது  அரசியல்வாதியாக செல்லவில்லை என்கிறார்.

காயமடைந்தவர்களை பலரும்  சந்திப்பது இயல்புதான். ஆனால் அது திசைதிருப்பும் செயலாக இல்லாதவரை  தவறில்லை.

ஆனால் அரசியல் ரீதியாக அவர் சென்றிருந்தால் தவறு. ஏனென்றால் இதே போல வேறு பல பிரச்சினைகளால் தமிழகம் பாதிக்கப்பட்டபோது.. அதாவது தானே புயல், வர்தா புயல் போன்ற பாதிப்புகளின் போது ரஜினி மக்களை சந்திக்கவில்லை.

நடிகர் மயில்சாமி:

தூத்துக்குடி மக்களை ரஜினி சந்திப்பது சிறந்த விசயம். ரஜினி மட்டுமல்ல. உச்சத்தில் இருக்கும் அனைத்துறை பிரபலங்கள், அதிகாரிகளும் அந்த மக்களை சென்று சந்திக்க வேண்டும்.