வேலூர்

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள நளினி சிகிச்சைக்காகச் சிறையில் இருந்து 90 நாட்கள் பரோல் கோரி உள்ளார்.

ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள நளினி 28 ஆண்டுக்கும் மேலாகச் சிறையில் உள்ளார்.  கடந்த 10 ஆம் தேதி அன்று நளினி தமிழக உள்துறைக்கு மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில் தமக்கு கண்புரை, பல்வலி, இரத்த சோகை ஆகிய உடல்நலக் குறைபாடுகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  மேலும் அதற்கான முழுமையான சிகிச்சை சிறையில் கிடைப்பதில்லை என்பதால் சித்த மற்றும் ஆயுர்வேத சிகிச்சைக்காக 90 நாட்கள் சிறையில் இருந்து பரோல் விடுப்புக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

நளினியின் வழக்கறிஞர் புகழேந்திக்கு சிறைத்துறை அளித்துள்ள தகவலில் நளினிக்கு மருத்துவச் சிகிச்சை தேவை என்பதால் பரோல் வழங்கத் தாமதம் ஆனால் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்தால் மருத்துவச் சிகிச்சை என்பதால் நீதிமன்றம் பரோல் வழங்க வாய்ப்புக்கள் உள்ளதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.