சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் புழல் சிறையில் இருந்து வரும் ராபர்ட் பயஸ், 30 நாட்கள் பரோலில் வந்துள்ளார்.

ராஜீவ் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ராபர்ட் பயஸ், கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். தமது மகன் திருமண ஏற்பாடுகளுக்காக பரோல் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கு விசாரணையில், பயசின் மனு சிறைத்துறை பரிசீலனையில் உள்ளதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டு இருந்தது. அந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 21ம் தேதி விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், பயசுக்கு நவம்பர் 25 முதல்(அதாவது இன்று) டிசம்பர் 24வரை 30 நாள்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டனர். சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும். பரோல் நாட்களில் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கவோ, அரசியல் தலைவர்களைச் சந்திக்கவோ கூடாது என்றும் கூறினர்.

இதையடுத்து, புழல் சிறையில் இருந்து 30 நாள் பரோலில்  இன்று விடுவிக்கப்பட்டார். அங்கிருந்து, பலத்த பாதுகாப்புடன் தமது வீட்டுக்கு செல்கிறார்.