நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவை : ஏழு பேர் விடுதலை குறித்து ஆலோசனை

ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசே விடுதலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இது குறித்து முடிவெடுக்க நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூடுகிறது

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டு தற்போது சிறையில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் மாநில ஆளுநர் விடுதலை செய்யலாம் என  உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து, ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக அரசு உடனே முடிவெடுக்க வேண்டும் என திமுக உள்பட பல்வேறு கட்சிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில், நாளை மறுநாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், ஏழு  பேரின் விடுதலை குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.