ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலையை உரிமையாகக் கோர முடியாது : தமிழக அரசு

சென்னை

ராஜிவ் காந்தி கொலையாளிகள் 7 பேரும் விடுதலையை தங்கள் உரிமையாகக் கோர முடியாது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 7 பேரும் தற்போது 28 வருடங்களுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்யக் கோரி பல ஆர்வலர்கள் போராடி வருகின்றனர். இது குறித்து   குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அவர் விடுதலை குறித்து ஆளுநர் முடிவு செய்யலாம் எனத் தெரிவித்தது. ஆனால் உச்சநீதிமன்றம் அவ்வாறு தெரிவித்து 7 மாதங்கள் ஆகியும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை.

தண்டனை பெற்று வரும் 7 பேரில் ஒருவரான நளினி தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசின் பதிலைக் கேட்டிருந்தது. அதற்கு தமிழக அரசு. ”உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழக ஆளுநர் இது குறித்து முடிவு எடுக்க வேண்டும். தண்டனைக் காலம் முடியும் முன்பு விடுதலை செய்வது குறித்து அரசு எவ்வித முடிவும் எடுக்க முடியாது. ஆயுள் தண்டனை கைதிகளுக்கு விடுதலையை  தங்கள் உரிமையாகக் கோரிக்கை வைக்க முடியாது” எனப் பதில் அளித்தது.

ஏற்கனவே கடந்த 2018 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் தமிழக  சட்டப்பேரவையில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரையும் விடுவிக்க ஆளுநர் விதி எண் 161 இன் படி அனுமதி அளிக்க வேண்டும் எனத் தீர்மானம் இயற்றப்பட்டது. தற்போது அதற்கு நேர்மாறாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.