முருகன் – நளினி தொடர் உண்ணாவிரதம் : வேலூர் சிறையில் பரபரப்பு

வேலூர்

வேலூர் சிறையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள முருகன் மற்றும் அவர் மனைவி நளினி தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களில் முருகன் மற்றும் அவர் மனைவி நளினியும் உள்ளனர்.   இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  முருகன் வேலூர் மத்திய சிறையிலும் அவர் மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்ற மாதம் 18 ஆம் தேதி வேலூர் மத்தியச் சிறையில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் முருகன் அறையில் இருந்து மொபைல் போன் கைப்பற்றப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.   அதையொட்டி அவருக்கு வழங்கப்பட்ட சலுகைகளை 3 மாதங்களுக்கு ரத்து செய்த சிறை அதிகாரிகள் அவரை தனிச்சிறையில் அடைத்துள்ளனர்   இதை எதிர்த்து முருகன் கடந்த 17 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார்.

தன்னை சிறை அதிகாரிகள் சித்திரவதை செய்வதாகவும் அதனால் தனது உயிரைக் காப்பாற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.  அவருக்கு ஆதரவாகக் கடந்த 10 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் அவர் மனைவி நளினி  தனது கணவருக்கு சிறையில் நடக்கும் கொடுமைகளைத் தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் அனைத்து சலுகைகளும் மீண்டும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

உண்ணாவிரதத்தால்  இருவருடைய உடலிலும் நீர்ச்சத்து குறைவு ஏற்பட்டுள்ளது.  இவர்களின் உடல்நிலை மோசமடைந்து வருவதால் வேலூர் சிறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  முருகனுக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் குளூகோஸ் ஏற்றப்படுகிறது  நளினிக்கு விரைவில் குளுகோஸ் ஏற்றப்படும் எனச் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.