ராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரம்: ஆளுநருக்கு ராமதாஸ் கண்டனம்

சென்னை:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் 7 தமிழர் விடுதலை செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ள நிலை யில்,ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதற்கு பாமக தலைவர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையை ஆளுநர் அவமதிக்கலாமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறி வாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தமிழக அரசின் பரிந்துரை மீது ஆளுநர் மாளிகை இன்று வரை எந்த முடிவும் எடுக்கவில்லை. தமிழகத்தின் உணர்வு சார்ந்த விவகாரத்தில் மாநில அரசின் பரிந்துரையை மதிக்காமல் ஆளுநர் மாளிகை அலட்சியமாகச் செயல்படுவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய எழுவர் விடுதலை குறித்த வழக்கில் செப்டம்பர் 6 ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, 7 தமிழர் விடுதலை குறித்து அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின்படி ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று ஆணையிட்டது.

அதையடுத்து செப்டம்பர் 9-ம் தேதி தமிழக அமைச்சரவை கூறி 7 தமிழர்களையும் விடுதலை செய்ய ஆணையிடும்படி ஆளுநருக்குப் பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றியது. அதன் மீது ஆளுநர் மாளிகை இந்நேரம் முடிவெடுத்து 7 தமிழர்களையும் விடுதலை செய்திருக்க வேண்டும்.

ஆனால், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்றுடன் இரு மாதங்கள் நிறைவடையும் நிலையில், 7 தமிழர்கள் விடுதலை குறித்து ஆளுநர் மாளிகை இன்னும் தாமதிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. இது சம்பந்தப்பட்டவர்களின் விடுதலை உரிமையைப் பறிக்கும் செயலாகும்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலை குறித்த மாநில அமைச்சரவையின் பரிந்துரை மீது முடிவு எடுப்பதில் ஆளுநர் மாளிகை காட்டும் காலதாமதத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72-வது பிரிவின்படி குடியரசுத் தலைவரிடமும், 161-வது பிரிவின்படி ஆளுநரிடமும் தாக்கல் செய்யப்படும் கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க கால அவகாசம் நிர்ணயிக்கப்படவில்லை என்பது உண்மை தான்.

ஆனால், இதை எல்லையில்லாத அவகாசம் அளிக்கப் பட்டிருப்பதாக கருதக்கூடாது; மாறாக, ஜனநாயகத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை உறுதி செய்யும் வகையில் முறைப்படுத்தப்பட்ட வகையில் அரசு செயல்பட வேண்டும் என்பதையே இது வலியுறுத்துவதாக கருத வேண்டும் என பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சதாசிவம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 72/161 பிரிவுகளின் கீழ் தாக்கல் செய்யப்படும் கருணை மனுக்கள் தான் ஒருவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும் விஷயத்தில் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நம்பிக்கை ஒளிக்கீற்றை விதைக்கின்றன.

எனவே, இந்த விஷயத்தில் நிர்வாகம் நியாயமான காலத்திற்குள் முடிவெடுக்க வேண்டும். சட்டவிதிகள் முழுமையாக கடைபிடிக்கப்பட்டால் 72/161 பிரிவுகளின்படி தாக்கல் செய்யப்படும் கருணை மனுக்கள் மீது இப்போது எடுத்துக் கொள்வதை விட இன்னும் குறைவான காலத்தில் முடிவெடுக்க முடியும்.

இதுதொடர்பான நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்புச் சட்ட அதிகாரத்தில் தலையிட நாங்கள் விரும்பவில்லை. மாறாக கருணை மனுக்கள் விஷயத்தில் குடியரசுத் தலைவர் விரைந்து முடிவெடுக்க வசதியாக, அதுகுறித்த பரிந்துரையை நியாயமான காலத்தில் அரசு வழங்க வேண்டும் என மன்றாடுகிறோம் என்று நீதிபதிகள் சதாசிவம், ரஞ்சன் கோகாய், சிவகீர்த்திசிங் ஆகியோர் அளித்த தீர்ப்பின் 28, 29-ம் பத்திகளில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் தெளிவாக தெரியவருவது என்னவென்றால் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்ப தில் குடியரசுத் தலைவருக்கோ, ஆளுநருக்கோ எந்த தனி அதிகாரமும் இல்லை; மத்திய அரசோ, மாநில அரசோ அளிக்கும் பரிந்துரைப்படி தான் அவர்கள் முடிவெடுக்க வேண்டும்; கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதற்கான கால அவகாசம் அரசுகளுக்குத் தானே தவிர, குடியரசுத் தலைவருக்கோ, ஆளுநருக்கோ அல்ல; அதேபோல் முடிவெடுக்கும் விஷயத்தில் தேவையற்ற காலதாமதம் செய்யக்கூடாது என்பது தான்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதல்களும், அறிவுரைகளும் 7 தமிழர்களை விடுதலை செய்யும் விவகாரத்திற்கும் பொருந்தும். 7 தமிழர் விடுதலை குறித்து 161-வது பிரிவின்படி மாநில அரசே முடிவெடுக்கலாம் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த மூன்றாவது நாளே தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்து விட்டது.

அதை ஏற்றுக் கொள்வதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை எனும் போது, 2 மாதங்களாக அதன்மீது எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டிருப்பதன் மூலம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஆளுநர் அவமதித்துள்ளார். இது மனித உரிமையை மீறிய செயலாகும்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 தமிழர்களும் 28 ஆண்டுகளாக சிறை களில் வாடி வருகின்றனர். அவர்களின் விடுதலை விஷயத்தில் தாமதம் செய்வது மிகப்பெரிய அநீதியாகும்.

எனவே, இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல் ஆளுநர் முடிவெடுத்து அவர்களை விடுதலை செய்ய ஆணையிட வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக ஆட்சியாளர்களும் தங்கள் கடமை முடிந்ததாகக் கருதி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் ஆளுநர் மாளிகைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்”.

இவ்வாறு ராமதாஸ் கூறி உள்ளார்.