Random image

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலையில் சிக்கல்: தமிழக அமைச்சரவை பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பினார் ஆளுநர்

சென்னை:

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பிய பரிந்துரையை ஆய்வு செய்த ஆளுநர், அதை மத்திய சட்டத்துறைக்கு அனுப்பி உள்ளார்.

இதன் காரணமாக ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரும் விடுதலையாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்குகளில் சிக்கி கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் கைதிகளை விடுவிப்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று உச்சநீதி மன்றம் சமீபத்தில் தீர்ப்பு கூறியது. அதைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் 7 பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கேற்றார்போல  கடந்த வாரம் தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி,  பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு  கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய ஆளுநர் பன்வாரிலால், தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை அடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதன் காரணமாக ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் விடுதலையாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.