சென்னை:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளி ராபர்ட் பயஸ்-க்கு சென்னை உயர்நீதி மன்றம் 1மாதம் பரோல் வழங்கி  உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளியான ராபர்ட் பயஸ், தனது மகன் திருமணத்துக்காக ஒருமாதம் பரோல் கேட்டு சிறைஅதிகாரிகளிடம் மனு அளித்த நிலையில், அவரது மனுமீது முடிவு தெரிவிக்காமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 26ந்தேதி, தனக்கு பரோல் தேவை என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

மனுவில், நெதர்லாந்தில் வசிக்கும் தன் மகன் தமிழ்கோவிற்கு திருமண ஏற்பாடு செய்ய 30 நாட்கள் பரோல் வழங்க கோரி சிறைத்துறை டிஐஜி-க்கு மனு அளித்ததாகவும் அந்த மனு மீது 40 நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பரோல் வழங்க சிறைத்துறை டிஐஜி-க்கு உத்தரவிட வேண்டும் எனவும், தனக்கு பரோல் வழங்கி னால் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள வழக்கறிஞர் தடா சந்திரசேகரன் வீட்டில் தங்க போவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை உயர்நீதி மன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் அமர்வில் நடைபெற்று வந்தது. கடந்த விசாரணையின்போது, பயஸ்  மனுவுக்கு சிறைத்துறை டிஐஜி மற்றும் புழல் சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, சிறை கண்காணிப்பாளரின் பதில் தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, ராபர்ட் பயஸ்-க்கு ஒரு மாதம் பரோல் வழங்குவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் நளினி பின்பற்றிய விதிகளை ராபர்ட் பயஸ் பின்பற்ற வேண்டும் எனவும்ட நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து சிறைத்துறையின் சட்ட நடைமுறைகள் முடிந்தவுடன் ராபர்ட் பயஸ் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.