Random image

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 7 பேர் விடுதலையை எதிர்த்த மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணை

டில்லி:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவிக்கும் மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேருக்கு பொது மன்னிப்பு அளிக்க தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தலைமையிலான அரசு முடிவு செய்தது.

இதை எதிர்த்து 2014ம் ஆண்டு இந்த படுகொலையால் பாதிக்கப்பட்ட அப்பாஸ், ஜான் ஜோசப், நாராயணன், மாலா, சாமுவேல் திரவியம், ராமசுகந்தம் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இந்த 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா, ஜோசப் ஆகியோரது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னருக்கு தமிழக அரசு பரிந்துரைத்த பதிவேடுகளை தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தற்போது தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,‘‘அரசியல் ஆதாயத்துக்காக தமிழக அரசு இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அரசியலமைப்புக்கு எதிரான செயல்பாட்டில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை கருத்தில் கொண்டு 7 பேரையும் விடுதலை செய்யும் முடிவை தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.