பெரும்பான்மையை வைத்து ராஜிவ் காந்தி மக்களை மிரட்டவில்லை : சோனியா பேச்சு

டில்லி

டந்த 1984 ஆம் வருடம் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த அறுதிப் பெரும்பான்மையை வைத்து ராஜீவ் காந்தி யாரையும் மிரட்டவில்லை என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் தற்போது பாஜக அதிக இடங்களைப் பெற்று ஆட்சியில்  அமர்ந்துள்ளது. இதனால் பல மசோதாக்களை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே அரசு சுலபமாக இயற்றி வருகிறது. இந்த மசோதாக்களால் நாடெங்கும் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதை எதிர்த்து குரல் கொடுப்போர் அச்சுறுத்தப்படுவதாகப் பல கட்சியினர் தெரிவிக்கின்றனர். நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் இதே கருத்தைச் சொல்லி உள்ளார்.

இந்த கைது நடந்த அடுத்த நாள் அதாவது நேற்று ராஜிவ் காந்தியின் பிறந்த நாள் விழா டில்லியில் நடந்தது. இந்த விழாவில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, உள்ளிட்ட பல தலைவர்கள் உரையாற்றினார்கள் இது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ராஜினாமாவுக்குப் பிறகு காங்கிரஸ்  இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு சோனியா காந்தி கலந்துக் கொண்ட முதல் பொது நிகழ்வு ஆகும்.

இந்த விழாவில் சோனியா காந்தி, ”தேர்தலில் வெற்றி தோல்வி என்பது  சகஜமானதாகும். தற்போது காங்கிரஸ் கட்சி கடும் பாதிப்பில் உள்ளது. ஆனால் இந்த துயரில் இருந்து அக்கட்சி விரைவில் மீண்டு வரும். நாட்டை பிளவு படுத்த மற்றும் சமுதாயத்தைச் சீரழிக்க நினைக்கும் சக்திகளை எதிர்க்க வேண்டிய பொறுப்பில் கட்சி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய நோக்கம் இந்திய அரசியல் சட்டத்தைக் காப்பதாகும்.

தற்போது நாட்டு மக்கள் அனைவரும் மிரட்டப்பட்டு ஒருவகை அச்சத்தில் உள்ளனர். கடந்த 1984 ஆம் வருடம் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி  அமைத்தது. அப்போது பிரதமராகப் பதவி ஏற்ற ராஜீவ் காந்தி இது போல யாரையும் மிரட்டியதோ அச்சுறுத்தியதோ கிடையாது. அதுமட்டுமின்றி 1989 ஆம் வருடம் நடந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். அந்த தோல்வியை அவர் மக்களின் தீர்ப்பு எனக் கூறி ஒப்புக் கொண்டார்.

அப்போது காங்கிரஸ் கட்சி அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக இருந்தும் அவர் சதி செய்து ஆட்சியைக் கைப்பற்ற எண்ணவில்லை. இதற்கு அவருடைய அரசியல் ஒழுங்கு மற்றும் நேர்மையும் மட்டுமே காரணம் என்பதை  நான் தற்போதைய தலைமுறையினருக்கு தெரிவிக்க விரும்புகிறேன். அவருடைய 75 ஆம் பிறந்த நாள் விழாவின் என்பது காங்கிரஸ் கட்சி நடத்தும் விழா மட்டும் இல்லை. அவர் இந்நாட்டுக்கு அளித்த சேவையை நினைவு கூறும் நாளாகும்” என உரையாற்றினார்.