சென்னை:

சென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சினை காரணமாக  ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் உள்ள கழிவறைகளுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கழிவறையின்றி நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை பூதாகாரமாக எழுந்துள்ள நிலையில், சென்னையில் கடுமை யான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை இல்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், அமைச்சர் வேலுமணியும் தெரிவித்து வருகின்றனர். ஊடகங்கள்தான்  தண்ணீர் பிரச்சினையை பெரிது படுத்துவதாக குற்றம் சாட்டி உள்ளனர்.

ஆனால்,  சென்னையில் கடந்த சில மாதங்களாக கடுமையான தண்ணீர்ப்பஞ்சம் நிலவி வருகிறது. இதன் காரணமாக பல  ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளதாகவும், ஒருசில ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

அதேபோல் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் பெரும்பாலானோர் வீட்டில் இருந்தே பணிபுரியும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும், ஒருசிலர் வேறு கிளைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. சென்னையில் ஓடும் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள கழிவறைகளும் தண்ணீர்  பஞ்சம் காரணமாக மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் செயல்பட்டு வரும் பிரபலமான அரசு மருத்துவமனையான ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையும் தண்ணீர் பிரச்சினையில் சிக்கி தவித்து வருகிறது. அவசர தேவைகளுக்கு போதிய தண்ணீர் இல்லாமல் பணிகள் முடங்கி வருவதாக கூறப்படுகிறது.

தண்ணீர் பிரச்சினை காரணமாக  மருத்துவ மனையில் உள்ள பல கழிவறைகள் பூட்டு போடப்பட்டு உள்ளன. இது நோயாளிகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற தமிழகம் மட்டு மின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் தினசரி ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.  இந்த நிலையில், அங்குள்ள  கழிப்பறைகளுக்கு பூட்டு போட்டு பூட்டப்பபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்த நிலைமையை விரைவில் சரிசெய்ய வேண்டும் என்பது நோயாளிகளின் கோரிக்கை வைத்துள்ளனர்.