ராஜீவ் கொலையாளிகள் விடுதலை வழக்கு: ஆகஸ்டு 14ல் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை!

டில்லி,

ராஜீவ் கொலையாளிகள்  7 பேர் விடுதலை செய்ய கோரி உச்ச நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வரும் திங்கட்கிழமை (ஆகஸ்டு14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும்,  பேரறிவாளன் உள்பட 7 பேர், தங்களை விடுதலை செய்ய வேண்டுமென சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு ஆகஸ்டு 14ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இதனால், அவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பேரறிவாளன் பரோல் கோரி சென்னை ஐகோர்ட்டில்  மனுத்தாக்கல் செய்துள்ளார். பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.