டில்லி,

ராஜீவ்காந்தி கொலை கைதிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள் என்று, ராஜீவ் காந்தியின் மனைவியும், அகில இந்திய காங்கிரஸ் தலைவரான  சோனியா காந்திக்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று, 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் கொலையாளிகளை கருணை அடிப்படையில் விடுவிக்கலாம் என்றும், அவர்களை விடுவிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடியரசு தலைவரை வலியுறுத்த வேண்டும் என்றும் உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி கேடி.தாமஸ் கூறி உள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு, சென்னையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், 1999-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

அன்றைய உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் உட்பட 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு  இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. அதில், பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி ஆகியோருக்கு மரண தண்டனையும், மற்ற மூவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. பின்னாளில், மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு கடந்த 2014ம் ஆண்டு,  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன் காரணமாக அவர்கள் விடுதலையாவது தடையானது.

இந்நிலையில், இந்த வழக்கில்  தீர்ப்பு வழங்கிய ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் தற்போது, சோனியாவுக்கு, குற்றவாளிகளை விடுதலை செய்ய ஆவன செய்ய வேண்டும் என்று கடிதம் எழுதி உள்ளார்.

அதில்,   “ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ளவர்களை விடுவிக்க நீங்களும் (சோனியாகாந்தி), ராகுல்காந்தி யும் இசைவு தெரிவித்தால் அதனை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும்.

ஏற்கனவே அவர்கள் நீண்ட காலத்தை சிறையில் கழித்துவிட்டனர். இதில், நீங்கள் மட்டுமே உதவிசெய்ய முடியும். இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகளுள் ஒருவன் என்ற முறையில் அவர்களுக்கு கருணை காட்டுவீர்கள் என இந்த கடிதம் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்”, என தெரிவித்துள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.