ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்யக்கூடாது: மத்தியஅரசு பிடிவாதம்

சென்னை:

ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 7 பேர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுவிக்க கோரி தமிழக அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் விடுதலை செய்யக்கூடாது என்று மத்திய அரசு பிடிவாதமாக கூறி உள்ளது. அவர்களை விடுதலை செய்தால், அது மற்ற குற்றவாளிகளுக்கு முன்னுதாரணமாகிவிடும் என்று மத்திய உள்துறை அமைச்சம் தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்து உள்ளது.‘

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி தேர்தல் பிரசாரத்திற்காக சென்னை வந்த போது,  சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற இருந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது விடுதலைப்புலிகளின்  மனித வெடிகுண்டால்  படுகொலை செய்யப்பட்டார். இது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது தொடர்பான வழக்கில் குற்றவாளிளாக கூறப்பட்ட  முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனை யும், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய  4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 3 பேரும் குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பினார்கள். ஆனால் அதுகுறித்து குடியரசு தலைவர் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியதை தொடர்ந்து, அவர்களது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உச்சநீதி மன்றம் கடந்த 2014ம் ஆண்டு உத்தரவிட்டது.  அப்போது, இவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு முடிவு செய்யலாம் என்றும் கூறியது.

அதையடுத்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதப, ராஜீவ் கொலை குற்றவாளிகளை அனைவரையும் விடுதலை செய்யப்பபோவதாக அறிவித்தார். ஆனால், அப்போது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பான விசாரணையில் உச்சநீதி மன்றம் 7 பேரையும் விடுதலை செய்ய தடை விதித்தது.

இந்த கொலை வழக்கை மத்திய அரசின் சிபிஐ விசாரணை நடத்தியதால், அவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று கூறப்பட்டது. இதற்கிடையில்,   தாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது. ஆனால், மத்தியஅரசு பதில் அனுப்பாமல் காலம் தாழ்த்தியது.

இந்த வேளையில் தமிழக அரசு ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மறுஆய்வு மனு மீதான விசாரணை உச்ச நீதி மன்றத்தில் நடைபெற்றது. அப்போது  7 குற்றவாளிகளையும் விடுவிப்பது குறித்து மத்திய அரசின் கருத்தை 3 மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதைத்தொடர்ந்தே மத்தியஅரசின் உள்துறை அமைச்சகம்  தமிழக அரசுக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தில்,  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி விடுதலை புலிகளின் கொடூர சதித்திட்டம் மூலம் கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தியுடன் அந்த சம்பவத்தில் 9 காவலர்களும் கொல்லப்பட்டனர். குற்றவாளிகள் 7 பேரில் 4 பேர் வெளிநாட்டவர்கள் என்பதால் விடுதலை முடிவு அபாயகரமான முன்னு தாரணமாகி விடும் என்பதோடு சர்வதேச அளவில் அதிர்ச்சியூட்டும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

மேலும், “முன்னாள் பிரதமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தேசத்தில் நடைபெற்ற குற்றங்களுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு கொடூரமானது. எனவே, ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய கூடாது என் அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரும் விடுதலையாவது மீண்டும் தடை பட்டுள்ளது.