கொரோனா ஊற்றுக் கண் ஆன ராஜ்கோட் : இரு தினங்களில் 100 க்கும் மேற்பட்டோர் மரணம்

ராஜ்கோட்

டந்த இரு தினங்களில் 100 பேருக்கு மேல் கொரோனாவால் மரணம் அடைந்ததால் ராஜ்கோட் நகரம் குஜராத்தின் கொரோனா ஊற்றுக் கண் எனக் கூறப்படுகிறது.

 

குஜராத் மாநிலத்தில் கொரோனா மரண எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது.  இதுவரை 3245 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதில் அகமதாபாத் நகரில் மட்டும் 1765 பேர் உயிர் இழந்தனர்.  இதையொட்டி அங்குத் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது மரண எண்ணிக்கை குறைந்துள்ளன.    மாறாக தற்போது ராஜ்கோட் பகுதியில் மரணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இங்கு கடந்த திங்கள் முதல் இரு தினங்களில் 100க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர்.  ஆனால் கடந்த மூன்று வாரங்களில் இங்கு 1000க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்திருக்கலாம் என உள்ளூர் மருத்துவர்கள் கூறுகின்றனர்.  மேலும் அரசு நிர்வாகம் மரண எண்ணிக்கையை குறைத்து சொல்வதை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு அரசியல் பிரமுகர், “இங்குள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள் காலி இல்லை.  அது மட்டுமின்றி ராஜ்கோட் நகர மயானங்களில் பிணங்களை எரிக்கப் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  இதன் மூலம் தற்போதுள்ள கொரோனா தீவிரத்தன்மையை நாம் எளிதில் அறிந்துக் கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

நேற்று இம்மாவட்ட ஆட்சியர் ரம்யா மோகனுக்கு கொரோனா உறுதி ஆகி அவர் தனிமையில் உள்ளார்.  இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தகர்களும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வர்த்தகத்தை நிறுத்தி உள்ளனர். இந்நிலை கடந்த ஒரு வாரமாக நீடித்து வருகிறது.   இம்மாவட்டத்தில் நகர்ப்புறம் மட்டுமின்றி கிராமங்களில் தொற்று அதிகம் உள்ளதாகக் கூறப்படுவதால் இது குஜராத் மாநில கொரோனா ஊற்றுக் கண் எனக் கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி