சீன தேசத்துக் காரை உதறிய தொழில் அதிபர்..

லடாக்கில் சீன ராணுவத்தின் இரக்கமற்ற தாக்குதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்ததால், சீன தயாரிப்புகளைப் புறக்கணிக்க வேண்டுமென்ற கோரிக்கை இந்தியாவில்  எழுந்துள்ளது.

இந்த நிலையில் சீன நாட்டு நிறுவனத்தின் காரை குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர், உதறித் தள்ளியுள்ளார்.

அவர் பெயர், மாயூர்த்வாஜ் சிங் சாலா.

ராஜ்கோட்டில் உள்ள கார் டீலர் ஒருவரிடம் ’எம்.ஜி.ஹெக்டேர்’ கார் ஒன்றை வாங்கக் கடந்த ஆண்டு 51 ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தி இருந்தார்.

சீன அரசுக்குச் சொந்தமான ‘ ஷாங்காய் ஆட்டோமேடிவ் தொழில் கழகம் அளிக்கும் மானிய உதவியை அந்த கார் தயாரிப்பு நிறுவனம் பெறுவதால், அந்த கார் தனக்கு வேண்டாம் என கூறியுள்ளார், சாலா.

அவர், பதிவு செய்த கார், ஊரடங்குக்கு முன்பே ராஜ்கோட் வந்து விட்டது. ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு, ஓரளவு நிலை சரியான பிறகு, அந்த தொழில் அதிபரிடம் ‘’ நீங்கள் பதிவு செய்த கார் வந்து விட்டது’’ என கார் டீலர் தகவல் தெரிவித்தபோது, ’லடாக்’ பயங்கரம் நிகழ்ந்திருந்தது.

இதனால் அந்த காரை பெற்றுக்கொள்ள சாலா மறுத்து விட்டார்.

இதனை உறுதிப் படுத்தியுள்ள கார் டீலர், முன்பணத்தை சாலாவிடம் திருப்பி கொடுத்து விடுவோம் என தெரிவித்துள்ளார்.

— பா. பாரதி