காஷ்மீர் தலைவர்கள் விடுதலை – பிரார்த்தனை செய்கிறாராம் ராஜ்நாத்சிங்!

புதுடெல்லி: கடந்த பல மாதங்களாக தொடர்ந்து வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் விரைவில் விடுதலை பெற தான் பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்.

அவர் கூறியதாவது, “காஷ்மீர் அமைதியாக உள்ளது. நாளுக்கு நாள் அங்கு சூழ்நிலை மேம்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். காஷ்மீரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும், அந்த மாநிலத்தின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவுகள்.

அனைவரும் இதனை வரவேற்க வேண்டும். பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் விரைவில் விடுதலை பெறவும், காஷ்மீர் மேம்பாட்டிற்காக அவர்கள் பாடுபட வேண்டும் எனவும் நான் பிரார்த்தனை செய்துகொள்கிறேன்” என்றார்.

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது முதல், வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர் காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முப்தி உள்ளிட்டோர். இதற்கு கடும் எதிர்ப்பு இருந்தாலும், மோடி அரசு எதற்கும் அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை.

காஷ்மீரில் என்ன நடக்கிறது என்றே வெளியுலகிற்கு தெரியாத நிலை நிலவுகிறது. ஃபரூக் அப்துல்லாவின் விடுப்பு விண்ணப்பம் மூன்றுமுறை நிராகரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மத்திய அரசின் ஒரு முக்கியமான அமைச்சர், அந்தத் தலைவர்களின் விடுதலை குறித்து பட்டும்படாமல் பேசியுள்ளார்.