காந்திநகர்

நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து சட்டத்துறை அமைப்புகளுக்கும் அரசியல் கட்சிகள் மதிப்பளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.

குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் இந்திய மேற்குப் பகுதி மாநிலங்களின் மாநாடு நடைபெற்றது.   இந்த மாநாட்டில் குஜராத், மகாராஷ்டிரா, கோவா, டையூ, டாமன், டாத்ரா, மற்றும் நாகர் ஹவேலி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.  இந்த மாநாட்டின் தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துக் கொண்டார்.

மாநாட்டின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த ராஜ்நாத் சிங், “ஒவ்வொரு அரசியல்கட்சிக்கும் மற்றும் அரசியல் அமைப்புகளுக்கும் உள்ள பொறுப்புக்களை தட்டிக் கழிக்க முடியாது.    சட்டத்துறை   அமைப்புக்களுக்கான மதிப்பையும் மரியாதையையும் காக்கும் பொறுப்பு அனைத்துக் கட்சிகளுக்கும் உண்டு.

ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் நீதிமன்றம் உள்ளிட்ட சட்டத்துறை அமைப்புகளுக்கு உரிய மதிப்பை அளிக்க வேண்டும்.  அதன் மூலமே மக்களுக்கு இத்தகைய அமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படும்.   இது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு அவசியம் ஆகும்.” எனக் கூறினார்.