Random image

காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும்…..ராஜ்நாத் சிங் அழைப்பு

ஸ்ரீநகர்:

காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 8ம் தேதி 4 கட்டங்களாக நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பே உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம் என்று தேசிய மாநாட்டு கட்சியும், மக்கள் ஜனநாயக கட்சியும் அறிவித்திருந்தன.

காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வழிவகை செய்யும் அரசியலமைப்புச் சட்டம் 35ஏ குறித்து மத்திய அரசு தெளிவான அறிவிப்பை வெளியிடவில்லை என்று கூறி புறக்கணிப்பு அறிவிப்பை வெளியிட்டன. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்புவிடுத்துள்ளார்.

இது குறித்து ராஜ்நாத் சிங் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘அரசியல் செயல்பாட்டில் அனைத்து கட்சிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் மக்களுடன் கலந்துரையாட கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படும். பாகிஸ்தானுடன் நல்லுறவு ஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு விட்டது.

அந்நாட்டுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டும் இந்த முயற்சியை மேற்கொண்டார். ஆனால் பாகிஸ்தான் தனது செயல்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. அண்டை நாடுடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.