காஷ்மீர் ஆளுநருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு

ஸ்ரீநகர்:

ம்மு-காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அம்மாநில ஆளுநர் என்.என்.வோராவை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார்.

காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் பிடிபி – பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஆனால், சமீபகாலமாக ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து மோதல் இருந்து வந்தது. இந்த நிலையில், மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. அறிவித்தது.

 

 

இதையடுத்து தனது முதல்வர் பதவியை மெகபூபா முப்தி உடனடியாக ராஜினாமா செய்தார். வேறு வகையில் ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கப்போவதில்லை என்று பா.ஜ.க.வும் அறிவித்தது.

புதிய அரசு அமையும் சூழ்நிலை இல்லாததால்,  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த அனுமதிக்குமாறு  குடியரசு தலைவர் மாளிகைக்கு ஆளுநர் வோரா பரிந்துரை கடிதம் அனுப்பினார். இந்த பரிந்துரையை ஏற்ற குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் அளித்தார். இதையடுத்து   ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இருநாள் பயணமாக நேற்று காஷ்மீர் சென்றார்.  அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், உள்துறை செயலாளர் ராஜிவ் கவுபா உள்ளிட்ட உயரதிகாரிகளும் சென்றுள்ளனர்.

ஸ்ரீநகரில் உள்ள விமானப்படை தளம் வந்த ராஜ்நாத் சிங்கை அதிகாரிகள் வரவேற்றனர். அதன்பின்னர், அங்கிருந்து அவர், ஆளுநர் மாளிகை சென்றார். அங்கு ஆளுநர்  என்.என்.வோராவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது, மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு மற்றும் அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை நடைபெற்றது.

இன்று அமர்நாத் கோவிலுக்குச் செல்லும் ராஜ்நாத் சிங், அங்கு பனி லிங்கத்தை தரிசிக்கிறார்.