சென்னை:

இலங்கையில் நடந்த இனப்படுகொலையின்போது கடந்த 2009ம் ஆண்டு, ஈழத் தமிழர்கள் கொத்து கொத்தாக முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டனர். லட்சத்துக்கு மேற்பட்டோர்  கொல்லப்பட்ட அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து வருடம் வருடம் தோறும் தமிழர்கள், மே 18ம் தேதி “முள்ளிவாய்க்கால் நினைவு தினமாக” தமிழ் மக்கள் கடைபிடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், புதிதாக கட்சித் துவங்கி அரசியலுக்கு நேரடியாக வருவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள  நடிகர் ரஜினிகாந்த்திடம் நேற்று முள்ளிவாய்க்கால் தினம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு நோ கமெண்ட்ஸ் என்று கூறி  பதில் அளிக்க மறுத்துவிட்டார் ரஜினி.

ரஜினியின் இந்த செயல் தமிழ் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காரணம், அவர் நடிக்கும் 2.0 படத்தைத் தயாரிக்கும் லைக்கா நிறுவனம், இலங்கையில் வீடிழந்த தமிழர்கள் சிலருக்கு வீடு கட்டித் தந்தது. அந்த நிகழ்ச்சிக்கு ரஜினி செல்ல இருந்தார். அதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து தனது பயணத்தை ரஜினி ரத்து செய்தார். அப்போது அவர் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதினார்.

அந்த கடிதத்தில், “தனது இனத்துக்காக, தனது மக்களுக்காக, தங்களது உரிமைக்காக, தங்களது சுய கௌரவத்திற்காக லட்சக்கணக்கில் ரத்தம் சிந்தி மடிந்து விட்டனர்.

தங்களை தாங்களே சமாதியாக்கிக் கொண்டு பூமியில் புதைந்து கிடக்கும் வீர மண்ணை வணங்கி அந்த மாவீரர்கள் வாழ்ந்த இடத்தையும், நடமாடிய இடத்தையும், புனித போர் நிகழ்ந்த இடத்தையும் பார்க்க ஆவலாக இருந்தேன். அத்துடன் அவர்கள் சுவாசித்த காற்றை சுவாசிக்க வேண்டும் என்று வெகுநாள்களாக ஆசை இருந்தது.

அதை நிறைவேற்றிக் கொண்டு என்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தமிழ் மக்களை சந்தித்து மனம் திறந்து பேச ஆவலாய் இருந்தேன். அது முடியாமல் போய்விட்டது” என்று ரஜினிகாந்த் மிகவும் உருக்கமாக எழுதியிருந்தார்.

அப்படிப்பட்டவர் இப்போது முள்ளிவாய்க்கால் இப்படுகொலை பற்றி கருத்து சொல்ல மருத்திருக்கிறார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

“ அப்படியானால் முன்பு ஈழத்தமிழர்கள் பற்றி உருகி உருகி ரஜினி எழுதினாரே.. அது ஏன்” என்று தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்