வ.ர.மே. : 4, ரஜினியை அழைப்பது ஏன்..?  – நியோகி

ல்லோரும் ஓர் நிறை ; எல்லோரும் இந்நாட்டு மன்னர் ! என்று பிரகடனம் செய்து போனார் தேசிய மகாகவி பாரதியார்.

ஒரு ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் !

ஆனால், ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்றதும், ஏன் இந்த குதி, குதிக்கிறார்கள்…?

அதே போல, இந்த ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம்…! எப்படியோ இங்கே ஒரு முதல்வர் இருந்து ஆளத்தான் போகிறார்!

ஆனால், திரு.ரஜினிகாந்த் அவர்கள் முதல்வராக வருவதுதான் நல்லது என ஏன் நான் சொல்கிறேன்…!? அப்படி, மற்றவர்களிடமில்லாத எது ரஜினியை முன் வைக்க சொல்கிறது…? காரண – வீரியங்களைக் காண்போம் !

ஏறத்தாழ 43 வருட பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர் திரு. ரஜினிகாந்த் ! இதுகாறும் யார் ஒருவரும் குற்றம் சொல்லாத அளவுக்கே தன் வாழ்க்கையை அவர் அமைத்துக் கொண்டிருக்கிறார் என்றே சொல்லி விட முடியும் ! அவரை சுற்றியுள்ளவர்கள் வேண்டுமானால் தவறிழைத்தி ருக்கலாம்.

ஆனால், தனிப்பட்ட முறையில், தன் நெஞ்சறிந்து அவர் ஓர் தவறிழைத்திருப்பதாய் இதுவரை எங்கிருந்தும் தகவலில்லை. அப்படியே, ஏதேனும் அதிருப்தி இருந்தாலும், அதை யாரேனும் எடுத்துச் சொன்னால், அதற்கு உடனடியாகத் தக்கப் பரிகாரம் தேடித் தந்துவிடுவதே அவரது குணமாக இருந்து வந்திருக்கிறது.

ஆரம்பத்திலிருந்தே, ஆன்மீக வழியில் வாழ்ந்து கொண்டிருப்பதால் இறையச்சம் எனப்படும் இந்தக் குணம் அவருக்கு இயல்பாகவே வந்து விட்டிருக்கிறது என்றே எண்ணுகிறேன்.

எனில், அவர் பரிசுத்தவானா..? அப்படி சொல்ல வரவில்லை. அவரிடமும் சில குறைகள் உண்டுதான். அவைகளையெல்லாம், எளிதில் அவரால் சரி செய்து கொள்ள முடியும் என்பதால், அவற்றையெல்லாம் முன் வைத்து இந்த தருணத்தை பேசிக் கடத்துவதில் பொருளில்லை.

இன்றைய அவசரம்…தமிழ்நாட்டை வீழ்ந்து விடாமல் காப்பதுதான். அதற்கு தகுதியானவர் ஒருவரை முதல்வராக அமர வைப்பதுதான்.

“யார்தான் திருடவில்லை…? நான் திருடினால் என்ன…?” என்ற நச்சுச் சிந்தனை இல்லாத ஒருவரை இந்த நாட்டுக்கு தலைமையேற்கச் செய்வதுதான் இன்றைய அவசரம் ! அவசியம் !!

ஆள்வது என்றால் என்ன..? அதிகாரிகளை ஆளவிடுவது தானே !

நல்ல, நல்ல அதிகாரிகளை இனங்கண்டு அவர்களுக்கு பரிபூரண சுதந்திரம் கொடுத்து, அவர்களை கடைசி வரை கண்காணித்து முடிப்பது!

அதை மனதில் கொண்டு ஏறெடுத்தோமென்றால்…திரு.ரஜினிகாந்த் அவர்கள் முதல் பார்வையிலேயே “டிக்” ஆகிவிடுகிறார்.

அவரது முற்று முதல் தகுதியாக இருப்பது….அவரிடம் எந்த ரிசர்வேஷனும் இல்லை என்பதுதான் !

எனக்கு, கொழுக்கட்டைதான் பிடிக்கும் ; இல்லை, இல்லை நோன்புக் கஞ்சிதான் பிடிக்கும் என்றெல்லாம் அவர் யாரையும் அவமதித்தது இல்லை ! இது வேண்டப்பட்ட சாதி ; இது வேண்டப்படாத சாதி என்றும் அவருக்கு எதுவுமில்லை ! வைதீகத்தை வழிமொழிவதுமில்லை ! ஈரோட்டுக் கிழவரை இகழ்வதுமில்லை ! ஆரியக் கூத்தும் இல்லை ! திராவிடப் பம்மலும் இல்லை ! தமிழ் பேசிக் காட்டு ; இல்லையென்றால் தீட்டு என்று அடாவடி செய்வதும் இல்லை. பணக்காரர்கள் மட்டுமே அவரை அண்ட முடியும் என்பதில்லை ; ஏழைகளின் சாப்பாட்டு ருசியையும் அவர் அறிவார் !

போலவே, மற்ற மற்ற அரசியல்வாதிகள் மேல் இருப்பதுபோல ரஜினி மீது எந்த ரிமார்க்கும் இல்லை !

கொள்கை மாற்றிப் பேசினார் ! சீட் பேரத்தில் ஈடுபட்டார் ! அணி மாறினார் ! பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றினார் ! மக்கள் சொத்தை கொள்ளையடித்தார் ! ஊழல் செய்தார் ! ஊர் சொத்தை குடும்பத்துக்கு எழுதி வைத்தார் ! என்றெல்லாம் அவர் மீது குற்றச்சாட்டுகள் இல்லை !

முழூ நேர அரசியலில் இருக்கிறோம் என்று சொல்லிக் கொள்பவர்களே உருப்படியாக எதுவும் செய்யாமல்… ஒவ்வொரு போராட்டத்தையும் கலெக்க்ஷனுக்கு வாய்த்த காரணங்களாகவே பார்த்துக் கொண்டிருந்து விட்டு, இன்று ரஜினி அரசியலில் இறங்குகிறார் என்றதும் அடித்துப் பிடித்து அங்கலாய்ப்பது எல்லாம் மக்கள் மன்றத்தில், அரங்கேறவா போகிறது !

திரு.ரஜினிகாந்த் அவர்கள் தனது 67 வயதில் இருக்கிறார். கடந்த நாற்பது வருடங்களில் அவரது அனுபவம் மிகப் பெரிது ! வற்றாத செல்வம்,  உச்சப் புகழ் என ருசித்தவர் கூடவே தோல்விகளையும், துரோகங்களையும் கண்டு விளைந்து தெளிந்திருக்கிறார். எளிமையாக இருக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. ஆனாலும், அப்படியே இருக்கிறார். அது அவருக்குப் பிடித்திருக்கிறது. ஆன்மீக அனுபவம் அவருக்கு அதை சொல்லிக் கொடுத்திருக்கக் கூடும் !

திரு.ரஜினிகாந்த் அவர்கள், தமிழ் – ஆங்கிலம் – தெலுங்கு – மலையாளம் – கன்னடம் – ஹிந்தி என பல மொழிகளை பேச அறிந்தவர் என்பதை விட, தான் சொல்ல வருவதை எதிராளியும் ஏற்றுக் கொள்ளும் படிக்கு “நாகரீகமான மொழி” யில் பேசத் தெரிந்தவர்.

அரசியல் விமர்சன உலகத்தில் பீஷ்ம பிதாமகராகப் திகழ்ந்த திரு. சோ அவர்களின் “துக்ளக் ஆண்டு விழா” வில், ஆண்டு தோறும் ஒரு பார்வையாளராக அமர்ந்திருந்து, “மிடில் க்ளாஸ் அரசியலை” உள் வாங்கிக் கொண்டவர்.

வன்முறை அரசியல் – காழ்ப்பு அரசியல் – இனமொழி வெறி அரசியல் என்பதையெல்லாம் கடந்தவர் என்பதால்…இவர் மீது, படித்த வர்கத்துக்கு ஓர் நல்லபிப்ராயம் எப்போதுமே உண்டு.

அதிகாரிகள் வர்க்கம் முகம் சுழித்துக் கொள்ளாது. சொல்லப் போனால், இவருடைய தன்மையான அணுகுமுறைக்கு தலை வணங்கி, தன் சக்திக்கு மீறி ஒத்துழைக்கத்தான் செய்யும். அதுதான் இன்றைய தேவை என்பதால் தமிழகம் முன்னேற்றப் பாதையில் செல்ல ஆரம்பிக்கும் .

இவருடைய பேச்சிலும் – அணுகுமுறையிலும் கிஞ்சித்தும் நாடகத்தன்மை இல்லையென்பதால்…ஏழை வர்க்கம் பரிபூரணமாக நம்பி வாக்களிக்கும் என்றே எண்ணுகிறேன்.

இன்று செகரட்டேரியட்டுக்கு சென்று பாருங்கள் ! ஒவ்வொரு தளமும் நாறிக் கிடக்கிறது.

ஒருபுறம், கொங்கு லாபி ! மற்றோர் புறம் முக்குலத்து லாபி ! இன்னோர் புறம் வன்னியர் லாபி ! போதாக் குறைக்கு எஸ்.சி லாபி ! வடக்கு மாவட்ட லாபி ! மத்திய மவட்ட லாபி ! பன்னீர் லாபி ! எடப்பாடி லாபி என கந்தைத்துணி போல வீச்சமெடுத்துக் கிடக்கிறது.

தங்களுக்குள்ளேயே அடித்துக் கொள்ளும் இவர்களால் மக்களுக்கு என்ன வழியைக் காட்டிவிட முடியும்…? தங்கள் மேலேயே நம்பிகையில்லாமல் வாழும் இவர்களால்… மக்களுக்கு என்ன நம்பிக்கையை அளித்து விட முடியும்…?

முடியாமல் கிடக்கும் தகப்பனிடம், அவசர அவசரமாக எழுதி வாங்கும் குணங்கெட்ட பிள்ளைகளைப் போல… ஆளாளுக்கு பணங்கொழிக்கும் துறைகளின் மேல் பாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பண்புள்ள, நல்லது கெட்டதை ஆய்ந்தறியும் திறனுள்ளவர்கள் தான் ஆட்சிப் பொறுப்புக்கு ஏற்றவர்கள் அல்லவா !?

கடந்த நாற்பதாண்டுக் காலமாக புரையோடிப் போயிருக்கும் இந்த சிஸ்ட்த்தை…அதன்  ஆழ அகலத்துக்கு சென்று, பழுது பார்த்து செப்பனிட வேண்டுமானால்…தீவிரமான நோக்கத்தோடு களமிறங்கியாக வேண்டும்.  ஈவு இரக்கமற்ற நியாயம் பொதிந்த ஆட்சி முறையை உயர்த்திப் பிடித்தாக வேண்டும்.

நன்மைகள் செய்யத் துவங்கும்போது, அதை நோக்கி  தீவிரமான எதிர்ப்பு எழத்தான் செய்யும் ! தாங்கள் இல்லாமல் ஆக்கப் படுவோம் என்று அறிந்த மாத்திரத்தில், இதுகாறும், சிஸ்டத்தை சுரண்டி உண்டு கொழுத்திருந்த   சமூக விரோத சக்திகள் எல்லாம் ஆங்காங்கே மூண்டெழத்தான் செய்யும். மறைமுகமாக மக்கள் பெயரில் வன்முறைகளை கட்டவிழ்க்கப் பார்க்கும்.  சற்றும் பின் வாங்காமல் அதனை அடக்கி ஒடுக்க வேண்டும்.

அப்படி ஒடுக்கப் படவேண்டும் என்றால்… அரசாங்க அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும். அவர்களுக்கு அரணாக காவல் துறையும் – நீதித் துறையும் உறுதியாக நிற்க வேண்டும். இதை நாடு தோறும் கண்காணித்து, ஊக்கப்படுத்த ஆங்காங்கே குழுக்கள் அமைக்க வேண்டும். அவைகள் கிராம அளவிலும் கிளைத்து செயல்பட வேண்டும்.

மத்திய அரசாங்கத்தோடு இணக்கமான – அதே சமயத்தில் மாநில நலன்களை விட்டுக் கொடுத்து விடாத அணுகு முறையை கைக் கொள்ள வேண்டும். அண்டை மாநில ப்ரச்சினைகளில் சிலவற்றை நல்ல முறையில் தீர்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையோடு அடிக்கடி அங்கே சென்று நல்லுறவைப் பேண வேண்டும்.  இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். எல்லாமே சாத்தியமானவைகள் தாம் !

ஆனால், இவற்றையெல்லாம் செயல்படுத்த வேண்டுமானால் மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற ஓர் ஒற்றைத் தலைமை இங்கே வேண்டும்.

அந்த தலைமையும் சுயநலமில்லாமல், “இந்த மக்களுக்கு எப்படியாவது  நல்லது செய்தே ஆக வேண்டும்…” என்று உளமார எண்ணுவதாக இருக்க வேண்டும்.

அவ்வாறான ஓர் தலைமை திரு.ரஜினிகாந்த் அவர்களாக இருக்க முடியும் என்பது எனது துணிபு !

இப்படி ஒரு ஆகாகாரமான செயலை செய்து முடிக்க, திரு.ரஜினிகாந்த் அவர்களைத் தவிர வேறு எந்த சக்தியும் இப்போது நமது கண்களுக்கு அகப்படவில்லை ! அதுதான் எனது கருத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது !

எப்படி…?

திரு.ரஜினிகாந்த் அவர்கள் பாராட்டிய வரிசையிலேயே அலசிப் பார்ப்போம்…

திரு.ஸ்டாலின் அவர்களை எடுத்துக் கொள்வோம். எதிர்க் கட்சியின் செயல் தலைவர்தான். நல்ல மனிதர்தான். தன் சக்திக்கு மீறி கடுமையாக உழைப்பவர்தான். படிப்படியாக நிர்வாகப் பயிற்சி பெற்றவர்தான். ஆனால், மிகத் தாமதமாக பொறுப்புகளை ஏற்றுக் கொண்டதே அவருக்கு ஒரு மைனஸ்ஸாக போய் விட்டதோ என்னும் படிக்கு…மக்களின் மனதில் இன்னமும் எழுச்சியை உண்டாக்க முடியாமல் இருக்கிறார். எம்ஜியார் – கருணாநிதி என்னும் குரோத அரசியலில் சிக்கிக் கொண்ட அவரால் பெரும்பான்மையான மக்களை “கன்சாலிடேட்” செய்ய முடியுமா என்றால்…”முடியாது” என்பதே நிதர்சனம் !

டாக்டர் திரு. அன்புமணி ராமதாஸ் அவர்களை எடுத்துக் கொள்வோம். திரு. ரஜினிகாந்த் அவர்களே சொன்னது போல நல்ல சிந்தனையாளர் தான். படித்தவர்தான். பண்போடு பழகும் குணமுள்ளவர்தான். சொல்லப் போனால் சட்டமன்றக் கூட்டத் தொடர் போல  “தைலாபுரம்” தோட்டத்தில் தன் கட்சி எம் எல் ஏக்களை வைத்து பயிற்சி கொடுத்து வளர்ப்பவர்தான். மாதிரி பட்ஜெட்டை பல ஆண்டுகளாக வெளியிட்டு வரும் ஒரே கட்சி பாமகதான். அதன் விடிவெள்ளி டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தான். எல்லாம் சரி, அவராலும் பெரும்பான்மை மக்களை “ஒன்றிணைத்து” விட முடியுமா என்றால்… ”முடியாது” என்பதே கசக்கும் உண்மை.

திரு. திருமாவளவனை எடுத்துக் கொள்வோம். அருமையான சிந்தனாவாதி. அற்புதமான பேச்சாளர். அயராத உழைப்பாளி. கடுமையான சூழலிலும் நாகரீகமான அணுகக் கூடிய பண்பாளர்.  எல்லாம் சரிதான். இவராலும் கன்சாலிடேட் செய்ய முடியுமா என்றால்…இயலாது !

திரு.சீமான் அவர்களை எடுத்துக் கொள்வோம். தமிழ் சமூகத்தை முன்னிருத்தி நெடும் கனவுகளை தன்னகத்தே சுமந்து கொண்டிருப்பவர். கடுமையான உழைப்பாளி.  சினிமா பின்புலம் உள்ளவர். ஆங்காங்கே சிறிது, சிறிதாய் இருந்தாலும், வீரியமான க்ரூப்களை உருவாக்கி வைத்திருப்பவர். எல்லாம் சரி ! இவராலும் தமிழக மக்களை கன்சாலிடேட் செய்து விட முடியுமா என்றால்…முடியவே முடியாது.

ஆக, கூட்டிக் கழித்தால்…பழைய அசிங்கங்களை அறுத்தெறிந்து, புதிய பாதையை வகுத்தாக வேண்டுமென்றால்…. தமிழக மக்களை ஒரே முகமாக “கன்சாலிடேட்” செய்து கொண்டு வருவதுதான் ஒரே மார்க்கம் !

அப்படிக் கன்சாலிடேட் செய்து, மக்கள் சக்தியின் மூலமாகவே மகத்தான மாற்றங்களைக் கொண்டு வந்து விடுவதுதான் தமிழகம் உய்ய ஒரே வழி !

அந்த, வழிக்கு யாரால் இட்டுச் செல்ல முடியும்..?

தயக்கமே இல்லாமல் சொல்கிறேன்… திரு.ரஜினிகாந்த் அவர்களால் மட்டுமே முடியும் !

எப்போது முடியும்…?

அதை, அவரே சொன்னால் நன்றாக இருக்கும் !

(தொடரும்…