சென்னை:

“தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி பவளவிழாவில் மேடையேற மறுத்த ரஜினி, தற்போது அக்கட்சி தலைவர் கருணாநிதியை சந்திக்க இருப்பது ஏன்” என்று தி.மு.க.வினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அரசியலுக்கு வரப்போவதாகவும் தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த்  வருகிற சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக  தெரிவித்துள்ளார்.

தான் செய்யப் போவது ஆன்மீக அரசியல் என்று அறிவித்த அவர், சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்துக்கு சென்று சுவாமி கவுதமானந்தாவிடம் ஆசி பெற்றார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று மாலை தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  கருணாநிதியின் உடல்நலம் விசாரித்து  ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதே நேரம், “தனக்கு தி.மு.க. சார்பான அரசியல் முத்திரை விழுந்துவிடும் என்று, முரசொலி நாளேட்டின் பவள விழாவில் மேடை ஏறவில்லை ரஜினிகாந்த். இதை மேடையில் பேசிய கமலும் மறைமுகமாக சுட்டிக்காட்டினார். இந்த நிலையில் ஆன்மிக அரசியல் செய்யப்போவதாக அறிவித்திருக்கும் ரஜினி, எதற்காகக தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திக்க நினைக்கிறார்” என்று தி.மு.க.வைச் சேர்ந்த சிலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும், “தலைவர் (கருணாநிதி) முழு நலத்தோடு இருந்தால் ரஜினியின் ஆன்மிக அரசியல் என்பது குறித்து கிண்டல் கேலியாக விமர்சனம் செய்திருப்பார்” என்றும் ஆதங்கத்துடன் சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.