சித்தூர்கர்

சித்தூர்கர் கோட்டையில் பத்மாவத் திரைப்படம் வெளியானால் தீக்குளிப்போம் எனக் கூறி 200க்கும் மேற்பட்ட ராஜபுத்திரப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று காலை முதல் நிக்கி மற்றும் ஜயஸ்ரீ ஆகிய இருவரும் சித்தூர்கர் கோட்டையில் ராஜ உடை அணிந்துக் கொண்டு,  தலைப்பாகை மற்றும் பட்டாக்கத்திகளுடன் அமர்ந்த படி நின்றபடி விதம் விதமாக புகைப்படம், செல்ஃபி போன்றவைகளை எடுத்துக் கொண்டு உள்ளனர்.   அங்கு உள்ளூர் மக்கள் விரைந்தவுடன்  அவர்களைப் போல் இருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு இதே போல செய்தவாறு அந்தப் புகைப்படங்களை தங்களது முகநூலில் பதிவிட்டபடி உள்ளனர்.

இவர்கள் அனைவரும் பத்மாவத் திரைப்படம் வெளிவருதை எதிர்த்து சித்தூர்கர் கோட்டையில் போராட்டம் செய்து வருகின்றனர்.   வரும் ஜனவரி 25க்குள் இந்தப் படத்தை தடை செய்யவில்லை எனில் தாங்கள் சித்தூர் கோட்டையில் அரசி பத்மாவதியைப் போல் தாங்களும் தீக்குளிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.   இதற்காக அவர்கள் தங்கள் விருப்பப்படி தற்கொலை செய்துக் கொள்ளும் உரிமையைக் கோரி பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் மனு செய்துள்ளனர்.

இந்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்கும் மகேந்திர குன்வர் என்னும் பெண், “ராஜபுத்திர பெண்களின் கண்களில் உள்ள கோபமும் ஆத்திரமும் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?   அவர்கள் எந்த ஒரு முடிவுக்கும் செல்ல தயாராக உள்ளனர்.   இதுவரை இது போல தீக்குளிக்க 1800 பெண்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.  தீக்குளிப்பு என்பது கடைசிப் படிதான்.   ராஜபுத்திர ஆண்களால் அந்தப் படம் வெளீ வருவதை தடுக்க முடியாமல் போனால் அந்த முடிவுக்கு வந்துள்ளோம்.  எங்கள் விருப்பப்படி தற்கொலை செய்துக் கொள்ள நாங்கள் அனுமதி கேட்டுள்ளோம்.    எங்கள் கடைசி நடவடிக்கை தீக்குளிப்பது”  எனக் கூறி உள்ளார்.

இது உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலம் என்பதால் இங்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த போராட்டத்தை கூர்ந்து கவனிக்கின்றனர்.    அமெரிக்காவை சேர்ந்த எவினா ஜோர்டன், “இந்தப் பெண்கள் நிஜமாகவே திரைப்படத்துக்காக தீக்குளிப்பார்களா?  எனக்கென்னவோ சந்தேகமாக உள்ளது.  ஒருவேளை இவர்கள் விளம்பர்த்துக்காக செய்கிறார்களோ?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

இவர்களுக்கு காவல் வழங்கும் சித்தூர்கர் காவல்துறை அதிகாரி கஜேந்திர சிங்,”போராட்டத்துக்கு காவல் அளிக்க வேண்டியது எங்கள் கடமை.   ஆனால் எனக்கு இவர்கள் தீக்குளிப்பார்கள் என தோன்றவில்லை.   தற்கொலை முயற்சி என்பது குற்றச் செயல் என்பதால் அவர்கள் தற்கொலைக்கு முயன்றால் தடுத்து அவர்களை கைது செய்ய தயாராக உள்ளோம்.   இதற்காக எங்களுடன் பெண் போலீஸ் அதிகாரிகளும் உள்ளனர்”  எனத் தெரிவித்துள்ளார்.