மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி:

டெல்லி வன்முறைக்கு குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சலசலப்பு மத்தியில் மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த வாரம் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கும், அந்த சட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

டெல்லி வன்முறையில் 46 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அதில் 10-க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது

இதையடுத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது. மேலும் வன்முறை பாதித்த பகுதிகளில் ‘144’ தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று முந்தினம் தொடங்கியது. டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க கோரி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் எம்.பிக்கள் டெல்லி வன்முறையைக் கண்டித்து கண்களில் கறுப்புத்துணி கட்டிக்கொண்டும், வாயை மூடிக்கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பிக்கள், டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.