மேல்-சபை துணை தலைவர் பதவி: அகாலி தளத்துக்கு ஆதரவு கொடுக்க பாஜக முடிவு

டில்லி:

பாராளுமன்ற மேல்-சபை துணைத் தலைவராக உள்ள பி.ஜே.குரியன் பதவி காலம் முடிவடைவதை யொட்டி, அந்த பதவியை பிடிக்க பாஜக, காங்கிரஸ்  கட்சிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

காங்கிரஸ் சார்பில், ஆதரவு கட்சியான திரினாமுல் கட்சியை சேர்ந்தவருக்கு ஆதரவு தரப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், பாஜக தனது கூட்டணி கட்சியான அகாலி தளத்துக்கு ஆதரவு தர முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

பாராளுமன்ற மேல்-சபை துணைத் தலைவராக இருந்த காங்கிஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் பி.ஜே. குரியனின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து புதிய துணைத்தலைவரை தேர்வு செய்ய வேண்டியதுள்ளது.

இந்த தேர்தல் குறித்த அறிவிப்பு மேல்சபை தலைவரால் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அந்த பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது.. மேல்சபை துணை தலைவரை,  மேல்-சபையில் உள்ள எம்.பி.க்கள் ஓட்டுபோட்டு தேர்வு செய்வார்கள். 113 எம்.பி.க்களின் ஆதரவு இருந்தால்தான் துணை தலைவர் தேர்தலில் வெற்றி பெற முடியும்.

மேல்-சபையில் பா.ஜ.க., காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் அந்த அளவுக்கு எம்.பி.க்கள் இல்லை. தற்போது  பாராளுமன்ற மேலவையில் 250 எம்.பி.க்கள் உள்ளனர்.  இவர்களில் 238 பேர் மாநில எம்.எல்.ஏ.க்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள். 12 எம்.பி.க்கள் நியமனம் செய்யப்பட்டவர்கள். இந்த எம்.பி.க்கள்தான் ஓட்டு போட்டுத்தான்  மேல்சபை துணைத் தலைவரை  தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதே வேளையில் காங்கிரஸ் கட்சிக்கு 51 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளதால், அவர்களாலும் நேரடியாக களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலக்கட்சிகளுடன் சேர்ந்து மேல்சபை துணைத்தலைவருக்கான வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

எனவே மாநில கட்சிகளின் எம்.பி.க்கள் ஆதரவை பெறுபவர்தான் துணை தலைவர் தேர்தலில் வெற்றி பெற முடியும். இதன் காரணமாக  மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் துணை தலைவராக ஆதரவு கொடுப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதனால் மேல்-சபை துணைத் தலைவர் தேர்தலில் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே பா.ஜ.க.வும் மேல்-சபை துணைத் தலைவர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. ஆனால் பா.ஜ.க. தன் சார்பில் வேட்பாளரை நிறுத்தாமல் கூட்டணி கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு அந்த பதவியை விட்டுக் கொடுக்க முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் மேல்-சபை துணைத் தலைவர் பதவியை அகாலிதளம் கட்சிக்கு பா.ஜ.க. விட்டு கொடுக்க பாஜக முடிவு செய்துள்ளதாகவும், அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் நரேஷ்குஜ்ரால் துணைத் தலவர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஏற்கனவே  சமீபத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவுக்கு அந்த பதவியை கொடுத்து, அரசியலில் கோர்த்து விட நினைத்திருந்த பாஜக, துணைத்தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவது கடினம் என்ற நிலையில்,  தற்போது அதிலிருந்து பின்வாங்கி கூட்டணி கட்சியான அகாலி தளத்துக்கு அந்த பதவியை ஒதுக்க முன் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.